Wednesday, May 15, 2019

நல்லகண்ணு வாழ்க்கை


Inline imageஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்லகண்ணு அவர்களை சந்தித்து இருந்தேன்... 
அப்போது விகடனுக்காக அவரது அரசியல் வாழ்க்கை தவிர்த்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணல் செய்தேன். 
அதிலிருந்து....(நல்லகண்ணுவை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்தவர்கள் அவரது மனதில் இன்னொரு ஓட்டத்தை அவதானிக்க இந்த பதிவு)

"என் மனைவி இருக்கும் போது என் அரசியல் வாழ்கையில என்னைக்குமே குறுக்கிட்டது இல்ல.உடம்புக்கு முடியாம இருந்தா ஆஸ்பத்திரில வச்சி மருத்துவம் பாத்தோம் ஆனாலும் அவ இறந்து போய்ட்டா.அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியலை,வாழ்க்கையில இது போல லாப நஷ்டங்கள் வரத்தானே செய்யும் அதுகளை நாம சகிச்சி தானே ஆகனும்.அதுதானே வாழ்க்கை.இப்போ நான் எதாவது போராட்டத்துலயோ வேற எங்கயோ அலைச்சிட்டு இருந்தாலும் என் மனசு அவளை நினைச்சிட்டு இருக்கும்.இயற்கை அவளையும் என்னையும் பிரிச்சிடுச்சி அந்த வேதனையை தாங்கிட்டு தான் இப்பவும் திரியுறேன்.என்னை ரொம்ப புரிஞ்சிகிட்டவ என் மனைவி ரஞ்சிதம் .அவளோட இழப்பு எனக்கு பெருத்த சேதாரம்.

எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு எனக்கு இருந்திச்சி.அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர் தான்.அதுல அவ என்ன புரிஞ்சிகிறது ரொம்ப ஈசியா இருந்திச்சி.டீச்சரா வேலை பாத்தா.எங்களுக்கு காசி பாரதி,ஆண்டாள்னு இரண்டு பொம்பள புள்ளைங்க ,அதுகள படிக்க வைக்கிறதுல இருந்து, என்ன தேவைனாலும் என் ரஞ்சிதமே செய்து கொடுத்துருவா.என் போராட்டத்துல ஒருநாளும் தடையா அவ இருந்ததே இல்லை.அடிக்கடி ஊக்கப்படுத்துவா.வீட்டுல போன அவ இருப்பா இப்ப இல்லை.என் மனம் அவள இப்பலாம் அடிக்கடி தேடுது.வீடே வெறுமையா இருக்கு.உயிருக்கு உயிரா இருந்த என் மனைவி இப்ப இல்லை என்கிற தனிமை என்னை துரத்துது.சுத்தி எல்லாருமே இருந்தாலும் அவ இல்லாதது பெரிய இழப்பாயிருக்கு.என் வாழ்க்கை பாதையை புரிஞ்சிக்கிட்டு என் வாழ்க்கை சுமையில பாதியை அவ தான் சுமந்தாள்.எனக்கு எந்த ராத்திரி போக வேண்டி வரும்,எந்த ராத்திரி வரவேண்டி வரும்.உண்ணா விரதம் இருக்க வேண்டி வரும்,ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.எல்லாமே அவளுக்கு தெரியும் ,கட்சி மேலயும் நம்பிக்கை ,என்மேலயும் அவளுக்கு நம்பிக்க இருந்ததால எதுக்குமே தடை சொன்னது கிடையாது.உங்களுக்கு வயசாகிட்டு அதுனால இனி அரசியலுக்கு போகண்டாம்னு சொன்னதும் கிடையாது. இப்ப கண்ண மூடுல ரஞ்சிதம் நினைப்பு வரும்.அவ இறந்த அன்னைக்கு தான் நான் ரொம்ப சோர்ந்துட்டேன்.என்ன பண்ண போறேனு தெரியாம இருந்திச்சி.என் மனைவி என்கிட்ட ,உங்களுக்கு வயசாகிட்டு அதுனால அரசியலுக்கு போகன்டாம்னு சொல்லல.ஆனா என் பிள்ளைங்க "அப்பா உங்களுக்கு வயசாகிட்டு இனி ரொம்ப அலையாதீங்கனு "சொல்லுறாங்க.என் மனைவி இருக்கும் போது அடிக்கடி எனக்கு போன் பண்ணுவா.போய் சேந்துட்டிங்களானு கேட்பா,சாப்டிங்களானு கேட்பா,எங்க இருக்கீங்கனு கேட்பா.இப்ப அவ போன்....

முன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன் இப்ப ஐஞ்சு வருசமா சைவம் தான்.அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன்.அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும்.ராவாலாடுனு ஒன்னு செய்வா ரொம்ப ருசியா இருக்கும் அது எனக்கு பிடிக்கும்னே செய்வா.எனக்காக நீ எதிர்பார்த்து இருக்க கூடாது ,உனக்கு பசிச்சா சாப்பிடுனு என் கல்யாணத்தை ஒட்டியே சொல்லிட்டேன் அதுனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவு தான்.நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன்.அப்போது நான் சொல்லக்கூடியது மனைவியை நம்ம அதிகாரத்த வச்சி மிரட்ட கூடாது.அன்பா இருக்கனும்,சமத்துவம் இருக்கனும்,சம நிலையில இருக்கனும்னு சொல்லி ஆசீர்வதிப்பேன்.என் மனைவி எனக்காக ரொம்ப விட்டு கொடுத்து போவா.என்ன தேடி யாரு வந்ததாலும் அவங்களை அன்போட வரவேற்று உபசரிப்பா.என்னை தேடி யார் வருவா அவங்க எப்படி பட்டவங்கனும் அவளுக்கு தெரியும்.இதுல ஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகு தான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி.ஜெயில் வாழ்க்கையை பத்தி அவளுக்கு தெரியும்,அவ நிறைய புக் படிப்பா,பேப்பர் படிப்பா நான் எதையாவது படிக்கமா விட்டுட்டாலும் இதை படிக்கலையானு கேட்பா.திடீருனு எதாவது செய்தியை காட்டி இதை பாத்தியளானு கேட்பா,நான் பாக்கலயேனு சொல்லுவேன்,இதை கூட பாக்காம என்ன படிக்கியனு கேட்பா.இப்போ கேட்க ஆளு இல்லை...

இதுல ஒரு விஷேசம் என்னனா நான் வெளியே போகும்போது செலவுக்கு அவளுகிட்டயே வாங்கிட்டு போய்டுவேன்.அவ வேலை பாக்கும் போது சம்பளத்தை நான் வாங்க மாட்டேன்.அவதானே என் வீட்டு நிர்வாகத்தை நடத்துவா.இது இல்ல அது இல்லனு எனக்கிட்ட சொல்ல மாட்டா எங்க குடும்பத்தை தாங்கிட்டு நடத்துனா.கொஞ்ச நிலம் இருந்து அதுல அரிசி வரும்,மத்தபடி அவளே சமாளிச்சி குடும்பத்த கொண்டு போனா.என் பிறந்த நாளுக்கு துணிமணி எடுத்து கொடுப்பா .அவளுடைய பிறந்த நாளுக்கு நான் கொடுக்கும் பரிசு ,நான் வீட்டில இருப்பதே பெருசு.நான் ஒரு நாளுமே சமையல் பண்ணுனது கிடையாது,ஏன் எனக்கு காப்பி போடவே தெரியாது.எங்களுக்கு உள்ள நடக்கும் உரையாடலே எதாவது செய்தி விசயமாட்டும்,ஜெயகாந்தன் சிறுகதையை பத்தியும் தான் இருக்கும்.அவ கிறிஸ்டின் அதுனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா.எல்லார் கிட்டயும் அன்பா இருக்கனும்,எல்லாரையும் சமமா நடத்தனும்னு சொல்லுவா.எப்பவாது டெல்லிக்கு போன அவளுக்கு சாரி எடுத்துட்டு வருவேன்.ரொம்ப சந்தோசப்படுவா.வெளிய போய்ட்டு நேரடியா வரதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.எங்க அப்பா என் வீட்ட என் பொண்டாடி பேருல தான் எழுதி வச்சாரு , மத்தபடி என் கூட பிறந்தவங்களுக்கு அவங்க பேருல எழுதி வச்சரு .காரணம் நான் பொது வாழக்கையில இருக்கேன்.அதுனால வித்து செலவு பண்ணிடுவேனோ என்கிற பயம் தான்.இப்பவும் என் வீடு என் மனைவி ரஞ்சிதம் பெயருல தான் இருக்கு .இப்போ சென்னைல இருக்கும் போது அவ சொன்னா நான் செத்து போய்ட்டேன்னா ,நம்ம சொந்த ஊருல தான் அடக்கம் பண்ணனும்னு ,அவ ஆசை படியே செய்தேன்.அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரொம்ப நாள் அவ இருக்க மாட்டானு தெரிஞ்சிச்சு.அவ இறக்கும் போது நான் ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன்.இறந்த அன்னைக்கு ரொம்ப நொடிஞ்சி போய்ட்டேன்.இப்ப வீட்டுக்கு போனா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ,தனிமையை உணருவேன்.இது எனக்கு மட்டுமில்லை வயதுகாலத்துல எல்லாருக்கும் ஏற்படக் கூடிய ஒரு உணர்வு தான்.

முதுமையில் தனிமை என்னை ரொம்ப வாட்டுது.என் வாழ்க்கையில பூரணமான துணையா இருந்து என்னோடு ,ஒரே கருத்தோடு இருந்து பொது வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைகும் எந்த வித தடையும் இல்லாமல் குடும்ப பொறுப்பு அத்தனையும் பாத்துக்கிட்ட என் ரஞ்சிதம் இப்போது என்னோடு இல்லை.தனிமையை உணருகிறேன்.

- Shylaja Vamsi
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval