Friday, November 14, 2014

உயிர்காக்கும் காற்றுப் பைகள்(AIRBAGS)


Description Driver airbag stored.JPGஉயிர்காக்கும் காற்றுப் பைகள்(ஏர்பேக்) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

இன்றைக்கு வரும் நவீன கார் மாடல்களில் இன்றியமையாத பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெறும் ஏர்பேக்குகள் விபத்து சமயங்களில் பயணிகளை காக்கும் ஆபத்பாந்தவனாக செயல்படுகிறது. கிராஷ் டெஸ்ட்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் ஏர்பேக்குகளை
கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பரிணாமங்களை பெற்று இன்று மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர்பேக்குகள் கார்களில் பொருத்தப்படுகின்றன. சரி, ஏர்பேக் பொருத்தினால் பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்துவிடுமா, ஏர்பேக்கின் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பது பற்றியும், அவற்றின் வகைகள் குறித்த தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஏர்பேக் வரலாறு

1941ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த வால்டர் லின்டரர் என்பவர்தான் காற்று நிரப்பட்ட முதல் ஏர்பேக்கை உருவாக்கினார். ஆனால், 1951ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜான் டபிள்யூ. ஹெட்ரிக் என்பவர் ஏர்பேக் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமைக்கு முதலில் விண்ணப்பித்தவர். 1953ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு அமெரிக்காவில் காப்புரிமை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மூன்று
மாதங்களுக்கு பின்னர் வால்டர் லிண்டரர் ஜெர்மனியில் காப்புரிமை பெற்றார்.
1960களில் நடந்த ஆய்வுகளில் லிண்டரரின் அழுத்தப்பட்ட வாயுவை அடிப்படையாக் கொண்டு இயங்கும் ஏர்பேக் விபத்து சமயங்களில் விரைவாக விரிவடையாது என்று தெரியவந்தது. இதேநேரத்தில் அமெரிக்காவின் கடற்படையில் டிசைனராக பணிபுரிந்த ஹெட்ரிக் தனது அனுபவத்தை வைத்து தனது வாகனங்களில் ஏர்பேக் சிஸ்டத்தை பொருத்தினார். மேலும், இவரது கண்டுபிடிப்புக்கு பல முன்னணி கார்
நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்கின. இதைத்தொடர்ந்து, 1971ம் ஆண்டுடன் ஹெட்ரிக் காப்புரிமையும் காலாவதியானது.
1964ல் ஜப்பானை சேர்ந்த யசுஸபுராவ் கபோரி என்ற பொறியாளர் வடிவமைத்த சேஃப்டி நெட் என்ற ஏர்பேக் சிஸ்டம் 14 நாடுகளில் காப்புரிமை பெறப்பட்டது. ஆனால், அதுவும் நடைமுறை சிக்கல்களால் பிரபலமடையவில்லை. இதைத்தொடர்ந்து, 1967ம் ஆண்டு ஒரு ஏர்பேக் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஆலன் கே பிரீடு என்பவர் மோதல் நிகழ்வதை கண்டறியும் சென்சார் தொழில்நுட்பத்தை
கண்டறிந்தார். இந்த சென்சார் மூலம் மோதல் ஏற்பட்டு 30 மில்லி செகண்ட்டுகளில் ஏர்பேக் விரிவடைந்துவிடும் நுட்பம் உருவானது. இந்த தொழில்நுட்பத்தை ஆலன் முதலாவதாக கிறைஸ்லருக்கு வழங்கினைார். இதைத்தொடர்ந்து, யாலே அண்ட் டோனே என்ற நிறுவனம் ஆட்டோ செப்டார் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஃபோர்டுக்கு வழங்கியது.

ஏர்பேக் முக்கியத்துவம்

1970களில் வர்த்தக ரீதியில் ஏர்பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1980 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில்தான் ஏர்பேக்கின் மகத்துவதை உணரத் துவங்கியதுடன், பரவலாக உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கார்களில் ஏர்பேக்கை பொருத்த துவங்கினர். முதலில் ஓட்டுனர், அடுத்து முன் இருக்கை பயணிக்கான என ஆரம்பமாகி இன்றைய நவீன ரக கார்களில் காருக்குள் அனைத்து
பக்கங்களிலும் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

சீட் பெல்ட்டும் அவசியம்

அமெரிக்காவில் ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டு ஏர்பேக்குகளை அறிமுகம் செய்தாலும், சீட் பெல்ட் பயன்பாடு குறைவாக இருந்தது. இந்தநிலையில், ஏர்பேக் பொருத்தப்பட்டு விபத்துக்குள்ளான 7 சம்பவங்களை ஆய்வு செய்த போது, ஒரு விபத்து ஏர்பேக்கினால் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஏர்பேக் சிஸ்டத்துடன், சீட் பெல்ட்டும்
பொருத்துவதன் அவசியம் புரிய வந்தது.

ஏர்பேக் தொழில்நுட்பம்

ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் காற்றுப் பைகள், மோதல் நிகழும்போது சென்சார்கள் உதவியுடன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காற்று நிரப்பப்பட்டு விரிவடைந்து ஓட்டுனர் மற்றும் பயணிகளை பாதுகாக்கும். தற்போது பல்வேறு வகைகளில் ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஸ்ஆர்எஸ் ஏர்பேக்

ஏர்பேக் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் மிக உன்னதமான ஏர்பேக் தொழில்நுட்பங்களில் ஒன்று எஸ்ஆர்எஸ் ஏர்பேக். அதாவது, மோதலுக்கு தகுந்தவாறு சீட் பெல்ட்டை இறுக செய்து, ஏர்பேக்கை சரியான நேரத்தில் விரிவடையச் செய்வதே எஸ்ஆர்எஸ் ஏர்பேக் சிஸ்டத்தின் மிக முக்கிய தொழில்நுட்ப அம்சம். இதனால், சாதாரண சீட் பெல்ட் கொண்ட கார்களைவிட எஸ்ஆர்எஸ் ஏர்பேக் சிஸ்டம்
கொண்ட கார்கள் விபத்தில் சிக்கும்போது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். 1981ம் ஆண்டு முதல்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்(W126) காரில்தான் இந்த எஸ்ஆர்எஸ் தொழில்நுட்பம் கொண்ட ஏர்பேக் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

சைடு ஏர்பேக்

பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால், பயணிகளை பாதுகாப்பதற்காக பொருத்தப்படுகிறது. விலையுயர்ந்த கார்களில் இது நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது. இது இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்று சைடு டார்சோ ஏர்பேக், மற்றொன்று சைடு கர்டெயின் ஏர்பேக். தற்போது பெரும்பாலான வாகனங்களில் சைடு கர்டெயின் ஏர்பேக்குகள் கொண்டதாக வருகிறது. 

சைடு கர்டெயின் ஏர்பேக்

சைடு கர்டெயின் ஏர்பேக்குகள் தலையில் ஏற்படும் படுகாயங்களை தவிர்க்கும் விதத்தில் முதலாவதாக டொயோட்டா அறிமுகம் செய்தது. கார் கவிழும்போதும், பக்கவாட்டில் மோதல் ஏற்படும்போதும் இவை விரிவடைந்து பயணிகளை பாதுகாக்கும். தற்போது எஸ்யூவி ரக கார்களில் மூன்று வரிசைக்கும் சேர்த்து ஒரே கர்டெயின் ஏர்பேக்குகள் பொருத்தப்படுகின்றன. கார்களின் பக்கவாட்டுப் பகுதியின்
உட்புறத்தில் பில்லர் மற்றும் ஃப்ரேமில் இவை பொருத்தப்படுகின்றன.

முழங்கால்களுக்கான ஏர்பேக்

ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணியின் முழங்கால்களை பாதுகாக்கும் வகையில் இவை பொருத்தப்படுகின்றன. 1996ல் கியா ஸ்போர்டேஜ் கிராஸ்ஓவர் மாடலில் முழங்கால் ஏர்பேக் நிரந்தர ஆக்சஸெரீயாக அறிமுகம் செய்யப்பட்டது. முழங்கால் ஏர்பேக்குகள் மிகச்சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாகவும், இவை அவசியமானது என்றும் யூரோ என்சிஏபி அமைப்பு தனது ஆய்வு முடிவுகளில் தெரிவித்தது.

ரியர் கர்டெயின் ஏர்பேக்

பின்புறத்தில் மோதல் ஏற்பட்டால், பின்புற பயணிகளின் தலையில் காயங்கள் ஏற்படுவதை காக்கும் விதத்தில் ரியர் கர்டெயின் ஏர்பேக் பயன்படுகிறது. 2008ம் ஆண்டு டோயோட்டா ஐ- க்யூ மாடலில் இந்த புதிய ரியர் கர்டெயின் ஏர்பேக் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதசாரிகளுக்கான ஏர்பேக்

பாதசாரிகளுக்கான ஏர்பேக் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. யூரோ என்சிஏபி பாதசாரிகளுக்கான சோதனைகளில் அதிகபட்ச மதிப்பீட்டையும் பெற்றது வி40 கார். ஏர்பேக் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இதனை கூறலாம்.

மோட்டார்சைக்கிள் ஏர்பேக்

கார்களுக்கு மட்டுமின்றி, தற்போது மோட்டார்சைக்கிளிலும் ஏர்பேக்கை பொருத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. 1970களிலிருந்து ஏராளமான ஏர்பேக் வகைகளை மோட்டார்சைக்கிளில் பொருத்தி இங்கிலாந்து போக்குவரத்து ஆராய்ச்சி மையம் சோதனைகளை நடத்தி வருகிறது. 2006ம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் ஏர்பேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது.

ஏர்பேக் ஆபத்து

உயிர்காக்கும் காற்றுப்பைகளாக கூறப்படும் இந்த ஏர்பேக் சில சமயத்தில் உயிரை குடிக்கும் காற்றுப்பைகளாக மாறிய சம்பவங்களும் நடந்துள்ளன. தொழில்நுட்பக் கோளாறுகளால் இதுபோன்று சம்பவங்கள் மிக அரிதாக நடந்திருந்திருக்கின்றன. மேலும், ஏர்பேக் பொருத்தப்பட்ட கார்களில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து செல்வது அவசியம். ஏனெனில், சீட் பெல்ட் அணிந்து செல்லாமல் விபத்தில்
சிக்கும்போது, ஏர்பேக் விரிவடைந்து படுகாயங்களை ஏற்படுத்திய சம்பவங்களும், சான்றுகளும் ஏராளம் என்பதை மனதில் வையுங்கள்.

ஏர்பேக் பொருத்தினால் போதுமா?

ஏர்பேக் பொருத்தினால் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்துவிடுமா என்றால் இல்லை என்று சமீபத்திய டட்சன் கோ காரின் கிராஷ் டெஸ்ட் முடிவு தெரிவிக்கிறது. டட்சன் கோ காரின் கட்டுமாம் மிகவும் மென்மையாக இருப்பதால், ஏர்பேக் பொருத்தினாலும் பிரயோஜனமில்லை என்று குளோபல் என்சிஏபி அமைப்பு அறிவித்ததோடு, அந்த காரின் விற்பனையை இந்தியாவில் உடனடியாக
நிறுத்துமாறு நிசான் குழுமத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை, ஏர்பேக் இல்லாமல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் தோல்வியடைந்தது. பின்னர் இரு ஏர்பேக்குகள் பொருத்தி சோதனை செய்யப்பட்ட அதே போலோ காருக்கு 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றது. எனவே, ஏர்பேக் பொருத்தப்படும் கார்களின் கட்டுமானமும் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval