Saturday, November 1, 2014

சிறந்த தர்மம்.

Community Helping Hands
தானம் செய்வது உங்களுக்கு மிக
நன்று'' என்று குர்ஆனின்
64-76வது வசனம் கூறுகிறது.
எதுவுமில்லாது ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி நிற்போரின்
தேவையைத் தேடிச்
சென்று தீர்ப்பதே சிறந்த தர்மம்.
"இறையச்ச முடையோர் தன்னிடம்
கேட்பவர்களுக்கும்
கேட்காதவர்களுக்கும் தானம்
செய்வார்கள்'' என்ற திருமறை 51-19
வசனப்படி தன்னிடம் கேட்டால்தான்
கொடுப்பது என்று காத்திருக்காது தேவையுள்ளவரின்
தேவையறிந்து தேடிச்
சென்று உதவுவது உயர்ந்தது.
அலி(ரலி) அவர்களின் வீட்டுக்
கதவு தட்டப்பட்டது.
கதவு திறந்ததும் வெளியில் நின்ற
அலி(ரலி) அவர்களின் அருமைத்
தோழரை உள்ளே அழைத்து அமரச்
செய்து அளவளாவிய பொழுது,
வந்தவர் 4000 திர்ஹங்கள் கடனைத்
தீர்கக முடியாமல் திணறிக்
கொண்டிருப்பதைக்
தெரிவித்து உதவி கோரினார்.
அவருக்கு 4000 திர்ஹங்கள்
கொடுத்து அனுப்பினார் அலி(ரலி)
அவர்கள். தோழர் சென்றதும்
அலி(ரலி) அவர்கள் அழுதார்கள்.
"கொடுப்பதைக் கொடுத்துவிட்டு ஏன்
அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்
அவரின் மனைவி பாத்திமா(ரலி)
அவர்கள்.
"பொருள்
போய்விட்டது என்று அழவில்லை.
அருமைத் தோழரின்
தேவையை அறிந்து தேடிச்
சென்று உதவாமல்
என்னை நாடி வரும்படி செய்துவிட்டேனே என்று அழுகிறேன்''
என்று பதிலிறுத்தார் பாங்கான தோழர்
அலி(ரலி) அவர்கள்.
"செல்வ நிலையிலும் வறுமையிலும்
தானம்
செய்து கொண்டிருப்பவர்களை அல்லாஹ்
நேசிக்கிறான்'' குர்ஆனின்
3-134வது வசனப்படியும்
இருந்தபொழுதும் இல்லாதபொழுதும்
இடையறாது தடையின்றி தானம்
செய்தார்கள் அலி(ரலி) அவர்கள்.
ஒரு சமயம் அலி(ரலி) அவர்கள்
வறுமையில்
வாடுவது அறிந்து ஒருவர் ஒட்டகம்
ஒன்றில் தேவையான
பொருட்களை அனுப்பினார்.
ஒட்டகத்திலிருந்து பொருள்களை இறக்கு முன்னரே ஒருவர்
வந்து அவரின்
வறுமையை விளக்கி உதவி கோரினார்.
அலி(ரலி) அவர்கள்
பாதி பொருள்களை அவருக்குப்
பங்கிட்டார்கள். வந்தவர்
பாதி போதாது; மீதியும் வேண்டும்
என்றார். அலி(ரலி) அவர்கள்
அனைத்தையும் அவர் எடுத்துச்
செல்ல அனுமதித்தார்கள்.
பொருள்களை எடுத்துச் செல்ல
ஒட்டகத்தையும் கேட்டார்
உதவி பெற்றவர். ஒட்டகத்தையும்
ஓட்டிச் செல்ல ஒப்புக் கொண்டார்கள்
அலி(ரலி) அவர்கள்.
ஒட்டகத்தைப் பிடித்து நின்ற ஒட்டக
ஓட்டி, மிரண்டுபோய்
விரண்டோடினான். அவனைப்
பிடித்து நிறுத்திய அலி(ரலி) அவர்கள்
ஓடிய காரணத்தைக் கேட்டார்கள்.
என்னையும் நீங்கள் தானம்
செய்து விடுவீர்களோ என்று பயந்து ஓடியதாகப்
பதிலிறுத்தான் ஒட்டக ஓட்டி.
பஞ்சமா பாதகங்களும் வன்முறையும்
கலவரமும் பசியால் ஏற்படுவதே.
தீயதைச் செய்யத் தூண்டும்
துணிவை உண்டாக்கும் பிணியாம்
பசிக்கு உணவளிப்பது உயர்ந்த
தருமம். இத்தருமங்களால்
இறையருளைப்
பெற்று இம்மை மறுமை இரண்டிலும்
நன்மை பெறலாம்
என்பதை எடுத்துரைக்கும் ஏற்புடைய
குர்ஆனின்
வசனங்கள்.
"ஏழைகளுக்கு உணவளிக்காதோருக்கும்
பிறரை
உணவளிக்க தூண்டாதவருக்கும்
மறுமையில் நண்பர்
கள் இல்லை''(69-34, 35)
"கடும் பசியாளிக்கும்
அநாதைகளுக்கும் வறுமையில்
வாடும் ஏழைகளுக்கும்
உணவளிப்பது சொர்க்கத்தில் சுக
வாழ்வைத் தரும்''. (90-14,15,16,18)
ஒரு நாள் அலி(ரலி) அவர்கள்
ஒரு தோட்டத்தில் நீர்
இறைத்து கூலியாகக் கிடைத்த வாற்
கோதுமையை வீட்டிற்கு எடுத்து வந்து மூன்று பங்கிட்டார்கள்.
முதல் பங்கை மாவாக்கி கூழ் காய்ச்ச
ஏற்பாடு செய்தார்கள். கூழ்
தயாராகும்பொழுது ஓர் ஏழையின்
இரங்கல் குரல் கேட்டது. கூழ்
ஏழையிடம் கொடுக்கப்பட்டது.
அடுத்த
பங்கு கோதுமை அரைக்கப்பட்டு கூழ்
காய்ச்சப்பட்டது. வீட்டு வாயிலில்
ஒரு அநாதை அருந்துவதற்கு ஆகாரம்
கேட்டு நின்றான். அக் கூழும்
அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
மூன்றாம் பங்கும் முறையாக
திருவையில் திருகி மாவாக்கி கூழ்
காய்ச்சப்பட்டது. இஸ்லாமியன்
அல்லாத ஒருவன் வாசலில்
நின்று யாசகம் கேட்டான்.
யோசிக்காது அக்கூழ்
அவனுக்கு வழங்கப்பட்டது.
ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்கள்
நோயுற்று பாயில் படுத்தார்கள்.
அவர்கள் மாதுளங்கனி சாப்பிட
விரும்பினார்கள். மனைவியின்
விருப்பத்தை நிறைவேற்ற அலி(ரலி)
அவர்கள் கடைத்தெருவுக்குச்
சென்றார்கள். மாதுளம்பழம்
கிடைக்கவில்லை. அடுத்த ஊரில்
அக்கனி கிடைப்பதறிந்து அவ்வூருக்குச்
சென்று மாதுளம்பழம்
வாங்கி வந்தார்கள். வரும் வழியில்
வீட்டை நெருங்கும் நிலையில்
பசியால் துடித்த ஏழையைக்
கண்டு இரக்கமுற்று வீட்டிற்கு அழைத்தார்கள்.
அந்த ஏழை வீட்டிற்கு வர
இயலாது என்றார்.
பசிக்கு உணவு வாங்கி உண்ண பணம்
கொடுத்தார்கள். எனக்கு நடக்க
சக்தி இல்லை. எங்கும் செல்ல
இயலாது என்று சொல்லி கையிலிருக்கும்
பழத்தைப் பசி போக்க, புசிக்கக்
கேட்டார். மாதுளம் பழத்தைப்
பசியாளிக்குக்
கொடுத்துவிட்டு வெறுங்கையுடன்
வீடு திரும்பிய அலி(ரலி) அவர்கள்
நடந்ததை நாயகியிடம் நவின்றார்கள்.
"இரங்குவோர் மீது அல்லாஹ்வும்
இரங்குகிறான். மண்ணில் உள்ளோர்
மீது இரங்குங்கள். விண்ணில் உள்ள
(இறை)வன் உங்கள் மீது இரங்குவான்.
இரங்கும் இயல்பு அருளாளனான
ரஹ்மானைச் சார்ந்தது. எனவே எவர்
அதனைச்
சார்ந்திருக்கிறாரோ அவரை அல்லாஹ்
சார்ந்திருக்கிறான்.'' அறிவிப்பவர் -
இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) நூல் -
அபூதாவூத், திர்மிதீ.
இந்நபி பொன்மொழிப்படி பாத்திமா(ரலி)
அவர்களின் நோய் அல்லாஹ்
அருளால் நீங்கியது.
"மக்களின் மீது இரங்காதவன்
மீது அல்லாஹ்வும் இரங்கமாட்டான்''
அறிவிப்பவர் - ஜரீர்(ரலி) நூல்- புகாரி,
முஸ்லிம், திர்மிதீ.
""துர்ப்பாக்கியவானிடமிருந்து இரங்கும்
இயல்பு அகற்றப்பட்டுவிடுகிறது''.
அறிவிப்பவர் - அபூஹீரைரா(ரலி)
நூல் - அபூதாவூத், திர்மிதீ, என்ற
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின்
எச்சரிக்கைகளை எண்ணி ஏக
இறைவனை அஞ்சி,
துஞ்சாது துயருற்றோருக்கு தொடர்ந்து தொண்டாற்றுவோம்.
பசிப்பிணி பரவாது புசிக்க, உண்ண
உணவு கொடுப்போம். உன்னதமாய்
உயர்வாய் எந்நாளும் ஏகனருள்
பெற்று வாழ்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval