Saturday, January 24, 2015

ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் இந்திய தேர்தல் கமிஷன் முடிவு

aadhar-cardபோலிகளை ஒழிப்பதற்கு வசதியாக ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
போலி வாக்காளர் சேர்ப்பு
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.
இதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தலைமைத்தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இது பிற கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி பெயர்கள் உள்ளதாக தி.மு.க. செய்துள்ள புகாரை உதாரணமாகக் கூறலாம்.
இனி ஆதார்தான் ஆதாரம்
எனவே சரியான வாக்காளர் பட்டியலை ஆதார் அட்டை அடிப்படையில் தயாரிக்க இந்திய தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளது. ஆதார் அட்டை தயாரிப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகள் வழங்கும்பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர் உட்பட சில மாவட்டங்களில் ஆதார் அட்டைகள் 80 சதவீதத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டைகள் வழங்கும் பணி முழுமை பெறும்போது, இதனை வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


போலிக்கு முற்றுப்புள்ளி
ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவது மற்றும் திருத்தங்கள் செய்தல், பெயர் சேர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டால், ஒரு வாக்காளரின் பெயர் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு வராது. இதன் மூலம் போலிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சரியான வாக்காளர் பட்டியல் தயாராகும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval