Monday, August 24, 2015

இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கை அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Madurai_High_Court
முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) காவல்துறை இணையதளத்தில் வெளியிடக் கோரும் மனுவை தமிழக அரசு 2 மாதங்களில் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.காசிராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மனு விவரம்: அரசின் அனைத்துத் துறைகளும் கணினிமயமாகி வருகின்றன. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், ஒருவர் மீது புகார் கூறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் புகார் விவரம் மற்றும் சட்டப்பிரிவுகள் குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
பல நாள்கள் காத்திருந்துதான் தெரிந்து கொள்ளமுடிகிறது. தன் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்த பின்பும் அவருக்கு முதல் தகவல் அறிக்கை குறித்து போலீஸார் தெரிவிப்பதில்லை. இதனால் தங்கள் மீதான குற்றம் என்னவென்று தெரியாமலேயே ஒருவர் சிறையில் அடைபடும் நிலை உள்ளது.
மேலும், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வதிலும் பிரச்னை ஏற்படுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் அதன் நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதி உள்ளது. போலீஸார் இதை முறையாகப் பின்பற்றுவதில்லை.
இதனால், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மூலம் மனு தாக்கல் செய்து தான் முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்கும் குறைந்தபட்சம் 2 நாள்கள் ஆகி விடுகிறது.
எனவே, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும். அதை, குற்றம்சாட்டப்பட்டவர்களோ அல்லது வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களோ பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை தமிழக உள்துறைச் செயலர், டி.ஜி.பி. ஆகியோர் 2 மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval