Saturday, January 14, 2017

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப்: தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.  உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை பலனில்லாமல் இன்று காலமானார். அவருக்கு வயது 91  ஆகும். தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆளுநராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு. 1990 - 91 மற்றும் 2004 - 2011 வரை தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். இதேபோல் உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பர்னாலா பணியாற்றியுள்ளார்.

பர்னாலாவின் வரலாறு:

பஞ்சாப் மாநிலத்தில் 1925ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தார். லக்னோவில் சட்டம் பயின்ற முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.  அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவராக சுர்ஜித் சிங் பர்னாலா விளங்கினார். பொற்கோயில் நடவடிக்கைக்கு பிறகு 1985ல் பஞ்சாப் முதல்வர் பொறுப்பை வகித்தார். பின்னர் 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்தார். உத்தரகாண்ட் மாநிலம் 2000ம் ஆண்டில் உருவான போது அதன் முதல் ஆளுநர் பொறுப்பை பர்னாலா ஏற்றார்.

பர்னாலாவின் பெருமை:

1991ல் பர்னாலா ஆளுநராக இருந்த போது திமுக ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு அறிக்கை கேட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி ஆட்சி கலைப்பு பரிந்துரைக்கு பர்னாலா மறுப்பு தெரிவித்து விட்டார். ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டதால் பர்னாலா பீகாருக்கு மாற்றப்பட்டார். பீகாருக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1991ல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின் இரங்கல்

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவு வேதனையளிக்கிறது. மேலும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பங்களிப்பை தேசம் நினைவு கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் பர்னாலா மறைவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  ஆளுநர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் சுர்ஜித் சிங் பர்னாலா என புகழாரம் சூட்டியுள்ளார்.  மேலும் திமுக அரசை கவிழ்க்க மத்திய அரசு கோரிய போது அதை துணிவுடன் எதிர்த்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பர்னாலாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பர்னாலா எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval