Thursday, November 17, 2016

விஜய் மல்லையாவின் ரூ1,201 கோடி கடன் தள்ளுபடி?

Vijay mallya 2765666fவிஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 60 நிறுவனங்கள் செலுத்தாமல் வைத்துள்ள சுமார் 7000 கோடி ரூபாய் வராக் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளதா‌க தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவிலிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வராக் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் அதிக கடன் பெற்றோர் பட்டியலில் முதல் நூறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் 63 நிறுவனங்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 31 நிறுவனங்களின் கடன்கள் பகுதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் பட்டியலில் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமானநிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்கவேண்டிய 1201 கோடி ரூபாய் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கே எஸ் ஆயில் என்ற நிறுவனத்தில் 596 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சூர்யா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் 526 கோடி ரூபாய் கடன், ஜிஈடி என்ஜினிரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய் கடன், சாய் இன்ஃபோ சிஸ்டம் நிறுவனத்தின் 376 கோடி ரூபாய் கடன் ஆகியவையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தள்ளுபடி‌ குறித்து பாரத ஸ்டேட் வங்கியை தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் கிடைக்கவில்லை என டிஎன்ஏ நா‌ளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தள்ளுபடியால் பயனடைந்த நிறுவனங்களும் இதுகுறித்து பதிலளிக்கவில்லை என்றும் அந்த நாளிதழ் கூறியுள்ளது. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் இந்த வேளையில், வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியான இந்த செய்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval