Wednesday, November 23, 2016

14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது எல் அண்ட் டி

எல் அண்ட் டி தலைமை நிதி அதிகாரி சங்கர் ராமன் மற்றும் துணைத் தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யன். | படம்: பிடிஐ.எல் அண்ட் டி நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 14,000 ஊழியர்களை தங்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளவும், தளர்ந்து போன தங்களது சில நிறுவனங்களை நிலை நிறுத்தவும் இந்த யுக்திசார் முடிவை எடுத்துள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.சங்கர் ராமன் கூறும்போது, “வர்த்தகம் சரியில்லாத போது அதனை மீண்டும் நிலைநிறுத்த இம்மாதிரியான யுக்திசார் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. வர்த்தகத்தை சந்தைச் சூழலுக்கேற்ப இயல்பு நிலைக்குத் திருப்ப வேண்டியுள்ளது, எனவே சில பணிகளில் கூடுதலாக ஆட்கள் பணியாற்றுவதாக நாங்கள் அறிந்தோம். இதனையடுத்து ஆட்குறைப்பு செய்தோம்.

நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகங்களில் சுமார் 1.2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 14,000 ஊழியர்களைக் குறைத்துள்ளோம். 

எல் அண்ட் டி நிதிச்சேவைகள் சில வர்த்தகங்களிலிருந்து தங்கள் கவனத்தை திருப்பியுள்ளதால் அதிலிருந்து நிறைய ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கனிமங்கள் மற்றும் உலோகங்கள் தொடர்பான வர்த்தகங்களிலும் இதே நிலைமைதான். 

போட்டியில் நிலைத்து நிற்க நாங்கள் வேறுபல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தேவைப்பட்ட இடங்களில் டிஜிட்டல்மயப் படுத்தியுள்ளோம். எனவே ஒரு பணிக்கு 10 பேர் தேவைப்படும் இடத்தில் 5 பேர் போதுமானதாக உள்ளது. மேலும் பல்வேறு காரணங்களினால் மந்தமடைந்த வர்த்தகங்களிலிருந்தும் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சில வர்த்தகங்கள் சரியாக நடைபெறவில்லை அதனை சீர்செய்ய முயற்சி செய்து வருகிறோம். எனவே பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை ஒருமுறை எடுக்கப்படும் நடவடிக்கையேயன்றி அதுவே இலக்காக ஒரு போதும் இருக்காது” என்றார்.
courtesy;The Hindu tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval