Thursday, November 10, 2016

புதிய 2,000 ரூபாயினால் கறுப்புப் பணம் எப்படி ஒழியும்?.. கேட்கிறார் ப.சிதம்பரம்

Image result for p chidambaram
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்புப்பணம் குறையும் என்பது புதிராக உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதற்கு பல பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.அதே நேரத்தில் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். உயர்மதிப்பு நோட்டு செல்லாது என்று 1978 ஆண்டு வெளியிட்ட அறிவிப்பால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதியவற்றை மாற்றி தருவது விரைவாக நடைபெறுமா என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட சிக்கல் இல்லாமல் பணத்தை மாற்றித்தர வேண்டும் என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை தான் ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று கூறியுள்ள ப.சிதம்பரம், 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதால் கறுப்புப் பணம் ஒழியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் என்ன பயன்? என்று கேட்டுள்ள சிதம்பரம், 15 லட்சம் கோடி அளவிற்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
அரசின் நடவடிக்கையால் ரூ.15 லட்சம் கோடியில் எவ்வளவு கறுப்பு பணம் சிக்கும்? என்று கேட்டுள்ள சிதம்பரம், 40 ஆண்டுகளுக்கு முன் 500 ரூபாய் உயர்மதிப்பு பணமாக இருந்தது இன்றைய நிலையில் அனைவரிடமும் 500 ரூபாய் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கையால் ஜிடிபியில் 4% அளவிற்கு பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுமா? என்று கேட்டுள்ள சிதம்பரம், புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட அரசுக்கு 15ஆயிரம் கோடியில் இருந்து 20ஆயிரம் கோடி வரை செலவு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval