Sunday, December 25, 2016

இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க டால்கோ ரெடி!


இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க டால்கோ ரெடி!மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயிலை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக டால்கோ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. முதல்கட்டமாக, மும்பையிலிருந்து ஆமதாபாத் நகருக்கு புல்லட் ரயில்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு ஒத்துழைப்புடன் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தில் பங்கெடுக்க சீனாவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தில் பங்கெடுக்க தயாராக இருப்பதாக டால்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டால்கோ அர்வில் என்ற புதிய புல்லட் ரயில் மாடலை அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்டது. அதிக அகலத்துடன் தாராள இடவசதி கொண்ட இந்த அர்வில் புல்லட் ரயில் இலகு எடை கொண்ட ரயில் பெட்டிகள் கொண்டது. மின்சிக்கனத்திலும் மிக சிறப்பானதாக தெரிவிக்கப்படுவதால், இயக்குதல் செலவும் பிற புல்லட் ரயில்களைவிட குறைவாக இருக்குமாம். அத்துடன், வேகம் எடுப்பதிலும், வேகத்தை குறைப்பதிலும் மிக திறன் வாய்ந்த புல்லட் ரயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மிக பாதுகாப்பான அதேசமயத்தில் மிக விரைவான பயணத்தையும் வழங்குமாம். இந்த ரயிலானது மணிக்கு 380 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. முதலாவதாக தனது தாயகமான ஸ்பெயின் நாட்டின் ரென்ஃபீ ரயில் நிறுவனத்துக்கு 15 அர்வில் புல்லட் ரயில்களை டால்கோ தயாரித்து வழங்க இருக்கிறது. அங்கு மணிக்கு 330 கிமீ வேகம் வரை அர்வில் புல்லட் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புல்லட் ரயிலுக்கான தேவை அதிகம் இருப்பதாக டால்கோ கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து டால்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் மரியா டி ஒரியோல் பப்ரா கூறுகையில்," மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே டால்கோ அர்வில் புல்லட் ரயில்களை தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம். அர்வில் புல்லட் ரயில்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும். அதற்கான சில முக்கிய பாகங்கள் மட்டும் ஸ்பெயின் ஆலையில் தயார் செய்யப்படும். இதனால், உற்பத்தி செலவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. புல்லட் ரயில்களை இயக்குவதற்கான புதிய டென்டர்கள் விடும்போது அதில் பங்கெடுக்கவும் முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், அதற்காக பிரத்யேக கட்டமைப்பு தேவைப்படும். இந்த திட்டத்திற்கான வழிகளை இந்திய அரசாங்கம் ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறோம்.," என்று அவர் கூறியிருக்கிறார். தற்போது மும்பை- டெல்லி இடையிலான 1,380 கிமீ தூரத்தை 17 மணிநேரத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடக்கின்றன. ஆனால், இந்த டால்கோ அர்வில் புல்லட் ரயில் இயக்கப்பட்டால், இரு நகரங்களையும் வெறும் 4 மணிநேரத்தில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அதிவேக டால்கோ ரயில்கள் இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் இந்த ரயில் சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புல்லட் ரயில்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க தயார் என டால்கோ கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval