Tuesday, February 7, 2017

நேதாஜி நினைவாக இருந்த ஒரே சாட்சியும் மறைந்தது..!

நேதாஜி பாதுகாவலர் நிஜாமுதீன்
உத்தர பிரதேசத்தின் அசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமுதீன். இவரது தந்தை ஷேக் முகமது அலி, சிங்கப்பூரில் ஓட்டல் நடத்தி வந்தார்.
இந்தியா பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. நேதாஜி ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். சிறு வயது நிஜாமுதீனுக்கு ஒரு ஆங்கிலேயரையாவது கொன்று விட வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம். 
அப்போது நேதாஜியின் முக்கிய கேந்திரமாக சிங்கப்பூரும் மலேசியாவும் இருந்தன. தந்தை சிங்கப்பூரில் ஓட்டல் நடத்திக் கொண்டிருப்பது நிஜாமுதீனுக்கு வசதியாக போய் விட்டது. கைச்செலவுக்குத் தாயார் கொடுக்கும் பணத்தில் இருந்து 25 ரூபாய் சேர்த்தார். அப்போது சிங்கப்பூர் செல்ல 25 ரூபாய் போதுமானது. பணம் சேர்ந்ததும் தந்தையை பார்க்கப் போகும் சாக்கில் சிங்கப்பூர் புறப்பட்டார்.  நிஜாமுதீனுக்கு அப்போது வயது 23. சிங்கப்பூரில் சில காலம் தந்தையுடன் இருந்தார். ஹோட்டல் தொழிலில் நாட்டம் செல்லவில்லை. அவரது இலக்கு அதுவல்லவே. நிஜாமுதீனின்  லட்சியமே நேதாஜியின் படையில் சேர்வதுதான். 
ஆங்கிலேயர்களுக்கும் இந்திய தேசிய ராணுவத்துக்கும் போர் தீவிரமடைந்திருந்த சமயத்தில், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நேதாஜி இந்தியர்களை திரட்டிக் கொண்டிருந்தார். நிஜாமுதீனும் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு நேதாஜியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல். அதற்கான வாய்ப்பு எளிதில் கிடக்கவில்லை. ஒருவழியாக 1937ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. நிஜாமுதீனிடம் இயல்பாகவே கனரக ஆயுதங்களை கையாளும் வலிமை இருந்தது. எந்த இக்கட்டான சூழலிலும் வாகனங்களை திறம்பட ஓட்டிச் செல்வார். இதுபற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்த நேதாஜிக்கு நிஜாமுதீனை பார்த்தவுடன் பிடித்துப்போனது. உடனே அவரை தன் நெருங்கிய பாதுகாவலராகவும், ஓட்டுநராகவும் நியமித்து, தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார் நேதாஜி. நிஜாமுதீனின் திறமை பிடித்துப் போனதால், பின்னர் இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.  
10 ஆண்டுகள் நேதாஜிக்கு தனிப்பட்ட பாதுகாவலராக நிஜாமுதீன் இருந்தார். பல முறை உயிர் தப்பியுள்ளார். அவரைப் பொறுத்தவரை தன் தலைவர் 1945ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை. அதாவது 1947ம் ஆண்டு வரை நேதாஜியுடன் தான் இருந்ததாக அடித்து சொல்கிறார். 
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, நேதாஜியுடன் நிஜாமுதீன் பர்மாவில் இருந்துள்ளார். ஜப்பானிய படைகள், இந்திய துருப்புகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்டேங் ஆற்று பகுதியில் திரண்டிருக்கின்றனர். வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தியர்களிடையே பேசிய நேதாஜி ‛‛நம் நாடு விடுதலை அடைந்து விட்டது. இனிமேல் எல்லோரும் நாடு திரும்பி சிறந்த குடிமக்களாக வாழ வேண்டும். நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்'' என உரையாற்றியதாக நிஜாமுதீன் நினைவு கூர்ந்திருக்கிறார். மேலும் தன்னை தனியே அழைத்து, ‛‛நமது இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் தீயிட்டு கொளுத்தி விடவும் உத்தரவிட்டார்'' எனவும் நிஜாமுதீன் தெரிவித்திருந்தார். அப்போது கூட ஸ்டேங் ஆற்றாங்கரையில் பிரிட்டன் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. 
நேதாஜி பாதுகாவலர் நிஜாமுதீன்
நேதாஜி உரையாற்றி விட்டு ஸ்டேங் ஆற்றில் நின்ற படகில் ஏறி சென்றிருக்கிறார். அடுத்த விநாடி பிரிட்டன் விமானங்கள் குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளன. நேதாஜியும் நிஜாமுதீனும் வந்த கார் உருக்குலைந்து விட்டது. நிஜாமுதீன் கண நேரத்தில் உயிர் தப்பினார். பிரிட்டனைப் பொறுத்த வரை காந்தியை விட நேதாஜிதான் முக்கிய எதிரி. பெரும்பாலான நாட்களை நேதாஜி நீர்முழ்கி கப்பல்களில்தான் கழித்திருக்கிறார். அந்த காலக்கட்டங்களில் நேதாஜியுடன் நிஜாமுதீன் இருந்திருக்கிறார். ஹிட்லரை சந்திக்க நேதாஜி ஜெர்மனி சென்ற போதும் அவருடன் நிஜாமுதீன் சென்றுள்ளார். டோகோ, ஹிரோஷிமா, நாகாசாகி, வியட்நாம், பர்மா என அனைத்து தேசங்களுக்கும் நேதாஜியுடன் பயணப்பட்டிருக்கிறார். 
நேதாஜி காணாமல் போன பின்னர், 1969 ம் ஆண்டு இந்தியா திரும்பிய நிஜாமுதீன் உத்தரபிரதேச மாநிலம் அசம்காரில் வசித்து வந்தார். கடந்த தேர்தலின் போது, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி நிஜாமுதீனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அப்போதுதான்  இளையத் தலைமுறைக்கு நிஜாமுதீன் பற்றியே தெரிய வந்தது. 1900ம் ஆண்டு பிறந்த நிஜாமுதீன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 117.

நிஜாமுதீன்  உடல் மீது இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. நேதாஜியை பற்றி எத்தனை ஆவணங்கள் இருந்தாலும் நிஜாமுதீன்தான் வாழும் ஆவணமாக நம்மிடையே இருந்தார். தற்போது அவரையும் நாடு இழந்து விட்டது.
courtesyvikadan 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval