Saturday, July 25, 2015

மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கினால் அரசுக்கு ரூ.260 கோடி இழப்பு

parliamentநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களால் முடக்கப்பட்டு வருகிறது. கூட்டத் தொடர் முழுவதும் இவ்வாறு செயல்படாமல் போனால் அரசுக்கு சுமார் ரூ.260 கோடி இழப்பு ஏற்படும் என தெரிகிறது. லோக்சபா, ராஜ்யசபா ஆகியவற்றை ஒரு மணிநேரம் கூட்டுவதற்கு தலா சுமார் ரூ.1.5 கோடி செலவாகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே அமளி ஏற்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மீதான லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழலில் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வலியுறுத்தல் என ஆளும் மத்திய பாஜ அரசு மீது எதிர்கட்சிகள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி அவையை முடக்கி வருகின்றன. அதே போல் எதிர்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க ஆளும் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு அவைகளும் திங்கட் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவை ஒரு மணி நேரம் நடத்துவதற்கு அரசுக்கு சுமார் ரூ.1.5 கோடி செலவாகிறது என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவைகள் முடக்கப்பட்டால் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மழைக்கால கூட்டத் தொடர் 21 நாட்கள் நடக்கும் என தெரிகிறது. வருகிற ஆகஸ்ட் 13ம் தேதியுடன் தொடர் நிறைவடைகிறது. கூட்டத் தொடர் முழுவதும் அலுவல்கள் எதுவும் நடக்காமல் முடக்கப்பட்டால் அரசுக்கு சுமார் ரூ.260 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval