Sunday, July 12, 2015

திருவாரூரில் இந்த பேனரைக் கண்டேன்.



முத்துப்பேட்டை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வரும்போது திருவாரூரில் இந்த பேனரைக் கண்டேன்.
வாழ்நாள் முழுவதும் இந்துத்துவ எதிர்ப்பையே மூச்சாகக் கொண்ட தலைவர்களையெல்லாம், அவர்களின் மறைவுக்குப் பின் தன்வயப்படுத்திக் கொள்வதை ஆர்.எஸ்.எஸ் ஒரு உத்தியாகவே கையாள்கிறது.
அம்பேத்கரை கொண்டாடியவர்கள் இப்போது காமராஜரை நோக்கி காய் நகர்த்துகிறார்கள். ஓட்டுக்காகவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் ஆர்.எஸ்.எஸ் செய்யும் இந்த மோசடியை அம்பலப்படுத்த வேண்டும்.
காமராஜருக்கும் இந்த காவி கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
இவர்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துபவர்கள்; அவரோ அதை எதிர்த்தவர்.
''மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்துதானே பொறக்கிறான். அதிலே என்ன பிராமணன், சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்..?''
- இப்படி, 'திருட்டு பயல்கள்; சோம்பேறிப் பசங்க; அயோக்கியர்கள்' என்றெல்லாம் கடும் சொற்களைப் பயன்படுத்தி யாரை காமராஜர் எதிர்த்தாரோ அவர்கள்தான் இன்று அவருக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
இன்று மாட்டுக்கறிக்கு தடைபோடும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை, அன்றே எதிர்த்தவர் காமராஜர்.
1966-இல் 'பசு பாதுகாப்பு' சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்து 'இதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?' எனக் கேட்டார். அதற்கு சாஸ்திரி 'இதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்' என்று சொன்னார்.
காமராஜர் அளித்த பதில் இதோ;
'என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!''
- இவ்வாறு பேசிய காமராஜர் மீது கடும் ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரை உயிரோடு கொளுத்த முயன்றனர்.
காமராஜரையே கொல்ல முயன்ற கும்பலின் தலைவனை அழைத்துவந்து, அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது கொடுமையிலும் கொடுமை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval