Monday, February 1, 2016

"மாத்தி யோசிச்சேன்... மளமளன்னு ஜெயிச்சேன்!"

சென்னை, அபிராமி மாலில் கூட்டம் சலசலக்கும் ‘மதுரை கிச்சன்’ கடையை எட்டிப் பார்த்தால், ஹார்லிக்ஸ் பணியாரம், பூஸ்ட் பணியாரம், திராட்சைப் பணியாரம், பேரீச்சைப் பணியாரம் என ஒரே பணியாரமயம்! ‘பணியாரத்தில் இத்தனை வெரைட்டிகளா?!’ என்று ஆச்சர்யப்பட, ‘‘எத்தனை பிளேட் சொல்லுங்க..?!’’ என்று பிசினஸில் பரபரப்பாக இருக்கிறார், அதன் உரிமையாளர் பானுமதி. சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வெங்கடேஷின் மனைவி! இந்த மதுரைப் பெண், சென்னை மாலில் பணியாரத்தை ஹிட் அடித்திருக்கும் வெற்றிக்குப் பின் இருக்கும் முயற்சிகள், கஷ்டங்கள்... அனைவருக்குமே அருமையான பாடம்!
‘‘கல்யாணத்துக்கு அப்புறம் என் மாமியார்கிட்டதான் சமையல் கத்துக்கிட்டேன். சுமாரா சமைச்சாலும், ‘சூப்பர்!’னு சொல்லி என் மனசு கோணாம பார்த்துக்குவார் கணவர். சாப்பாட்டுப் பிரியரான அவருக்கு ருசியா சமைச்சுப் போடணும்கிறதுக்காகவே கேட்டரிங் கோர்ஸ் படிச்சேன். சமையல் பக்குவம் எனக்குப் போகப் போக கைகூடிச்சு. மதுரையில வீட்டில் இருந்தபடியே கிராமத்து உணவுகளை சமைச்சு விற்பனை பண்ணிட்டு இருந்தேன்!’’ என்பவர், பெயின்ட்டிங், டெய்லரிங், பியூட்டி, ஜுவல்லரி மேக்கிங் உட்பட பத்துக்கும் மேற்பட்ட டிப்ளோமா கோர்ஸ்கள் முடித்திருக்கிறார். ஆன்லைனில் புடவை பிசினஸும் பானுமதிக்குப் பரிச்சயம்!
‘‘எல்லாம் மதுரையில இருந்தவரைக்கும்தான். கணவருக்கு சென்னையில்தான் வேலை என்பதால, இங்கேயே வந்துட் டேன். ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கணும்கிற ஆசையை அவர்கிட்ட சொன்னேன். ‘ஆரம்பிச்சிடுவோம்’னு ஆதரவா பேசினார். ஆனாலும் அகலக்கால் வைக்காம முதல்கட்டமா, மேற்கு மாம்பலத்துல வாடகைக்கு இருந்த ஃப்ளாட்டுக்கு வெளிய சின்னதா ஒரு கடை வெச்சு, பருத்திப்பால் செய்து விற்றேன். மூணு மாசத்துல கடை பிக்-அப் ஆன சமயத்துல, ‘ஃப்ளாட்டுக்கு வெளிய கடை போடக்கூடாது’னு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டாங்க.
கணவர் சின்னத்திரையில் முகம் காட்டினாலும், அவரோட முழு நேர வேலை பல்வேறு ஜவுளி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் விளம்பரம்தான். அப்படி தி.நகர்ல அவருக்குத் தெரிஞ்ச ஒரு ஜவுளிக்கடை நிர்வாகத்துக்கிட்ட அனுமதி கேட்டு, கடையின் வாசலில் சின்னதா ஒரு கடை வெச்சோம். ரெண்டு லட்சம் முதலீடு. என்னோட பருத்திப்பால், காளான் சூப்புக்கு ரெண்டாவது நாளே ஜவுளிக்கடை வாசலில் கூட்டம். ஆனா, அதுவே எங்களுக்கு எதிரா அமைஞ்சுபோச்சு. ஜவுளிக்கடை நிர்வாகம், கடையை எடுக்கச் சொல்லிட்டாங்க!’’ - இதற்கு அடுத்த தடவையும் சறுக்கியே இருக்கிறார் பானுமதி.
‘‘ரெண்டு லட்சம் முதலீடு செய்து இப்படி ஆயிருச்சேனு பயமும் கவலையுமா உட்கார்ந் துட்டேன். ஆனா, ‘நிச்சயமா உன்னால ஜெயிக்க முடியும்!’னு ஆறுதலும் தைரியமும் சொன்னதோட, அபிராமி மாலில் ‘மதுரை கிச்சன்’னு சின்னதா கடையை ஆரம்பிக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார் கணவர். ஜவுளிக் கடையில கொடுத்த அதே பருத்திப்பால், காளான் சூப்தான் இங்கேயும். ஆனா, தி.நகர் மாதிரியான மிடில் கிளாஸ் மக்கள் புழக்கம் உள்ள இடத்தில் ஹிட் ஆன பருத்திப்பால், இங்க எடுபடல. ‘பருத்திப்பால்னா என்ன?’னு கேட்கிறவங்களுக்கு எல்லாம் ஆர்வமா விளக்கம் கொடுப்பேன். ‘அது மாடு சாப்பிடுற அயிட்டம் ஆச்சே’னு நகர்ந்திடுவாங்க. முதல் மூணு நாளோட மொத்த வருமானம், வெறும் 300 ரூபாய்தான். தொழில் தள்ளாட்டத்துல எனக்கு சாப்பாடே இறங்காம போச்சு...’’ - இந்த மூன்றாவது சறுக்கலுக்குப் பின்னும் தளராமல், மாற்றி யோசித்திருக்கிறார் பானுமதி...
‘‘தொழில் சமையல்தான். ஆனா, அதில் என்ன புதுமை செய்யலாம்னு நிதானமா யோசிச்சேன். அப்போதான் வெரைட்டி பணியாரம் ஐடியா க்ளிக் ஆச்சு. புதுமையான ருசிகளில் வகை வகையா பணியாரம் செய்து வெச்சேன். சாப்பிட்டுப் பார்த்த மால் ஓனர் ராமநாதன் சார், ‘பணியாரம், கார சட்னி சூப்பர்!’னு பாராட்டினாரு. மால் விசிட்டர்ஸுக்கும் பணியாரம் பிடிச்சுப் போச்சு; பிசினஸ் பிக்-அப் ஆச்சு!
ஆரம்பிச்ச இந்த ஒன்றரை மாசத்துல இப்போ ஒரு நாளைக்கு சராசரியா 3,000 ரூபாயும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5,000 ரூபாயும் வருமானம் கிடைக்குது. நான் சோர்ந்து முடங்கியிருந்தா, இந்த வெற்றியை பார்த்திருக்கவே முடியாது. நம்பிக்கையோட மாத்தி யோசிச்சதாலதான் என்னோட பல வருஷ கனவு நிறைவேறியிருக்கு. அடுத்ததா, பன்னில் நிறைய ரெசிப்பிகள் செய்யப் போறோம். லாபமும் இருக்கலாம், நஷ்டமும் இருக்கலாம். ஆனா, எப்பவும் விடாமுயற்சி எங்கிட்ட இருக்கிற வரை, வெற்றி நழுவிப் போகாது!’’ என்று உற்சாகமாகப் பேசும் பானுமதிக்கு, கடையில் அவர் சகோதரி வாசுகி ராமசாமி உதவியாக இருக்கிறார்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval