Thursday, February 4, 2016

பெற்றோர்களுக்கு ஓர் விழிப்புணர்வு கட்டுரை

Say aaah - little boy at the physician checking his throat - stock photoசென்னை அடையாறில் உள்ளது  ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை. 3 வயதுப் பெண் குழந்தையை அவசர அவசரமாக அழைத்து வருகிறார்கள். குழந்தைத் தொண்டையைப் பிடித்துக் கொண்டு, ""அய்யோ... எரியுது... எரியுது'' என்று கத்துகிறது.
குழந்தையின் பெற்றோர் காசு ஒன்றை குழந்தை விழுங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். குழந்தை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறது.
மருத்துவர் பாசுமணி உடனே எக்ஸ்ரே எடுக்கச் சொல்கிறார்.
எக்ஸ்ரேயில் காசு வடிவத்தில் உள்ள வட்டமான ஒரு பொருள் உள்ளே இருப்பது தெரிகிறது. அதை எடுக்க மருத்துவர்கள் பாசுமணி, எம். சங்கர் முயற்சி செய்கின்றனர். தொண்டையில் உணவுக் குழாயின் மேல் பகுதியில் அவர்கள் பார்த்தபோது அதிர்ந்து நின்றனர்.
இனி மருத்துவர் பாசுமணி பேசுகிறார்...
""குழந்தையின் தொண்டையைப் பார்த்தபோது காசு போன்ற அந்தப் பொருள் இருந்த இடத்தைச் சுற்றிலும் அரிக்கப்பட்டிருந்தது. டாய்லெட்டில் ஆசிட் ஊற்றினால் இருக்குமே அதுபோல இருந்தது. குழந்தை விழுங்கியது காசு அல்ல, வேறு ஏதோ பொருள் என்று தெரிந்து கொண்டோம். அந்தப் பொருள் இருக்கும் பகுதியைச் சுற்றி  அரிக்கப்பட்டு புண்ணாகி இருந்ததால், தொண்டைக்குள் வளைந்து செல்லும் கருவியைக் கொண்டு அதை எடுக்க முடியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப் பொருளை எடுத்துவிட்டோம். பார்த்தால், அது சிறிய வட்டவடிவிலான 2 செ.மீ. அளவுள்ள லித்தியம் பேட்டரி.
நல்லவேளை. அந்தக் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தை, எங்களுடைய சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு நாட்களில் நார்மலாகிவிட்டது. இதிலிருந்து பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை  நிறைய இருக்கின்றன.

நமது வீட்டில் உள்ள ரிமோட் கண்ட்ரோல், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், கம்ப்யூட்டர் கேம்ஸ் பொருட்கள் எல்லாவற்றிலும் லித்தியம் பேட்டரி உள்ளது. அது குழந்தையின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பேட்டரியில் உள்ள மின்சாரம், வாயில் உள்ள உமிழ்நீர் பட்டதும் குறைந்தபட்சம் 3 வோல்ட் மின்சாரத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. அது மெல்லிய உணவுக்குழாய், தொண்டைப் பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  பேட்டரியிலிருந்து வேதிப்பொருள் வெளிப்பட்டு, உணவுக்குழாய், தொண்டை ஆகியவற்றின் தசைகளை அழித்து, புண்ணாக்கி ஓட்டை ஏற்படுத்திவிடுகிறது.
பேட்டரியை விழுங்கிய 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதை விழுங்கினோம் என்று சொல்லக் கூடத் தெரியாது. குழந்தை எதை விழுங்கினாலும் எல்லாரும் காசு அல்லது ஹேர்பின் போன்றவற்றை விழுங்கியிருப்பதாகத்தான் நினைப்பார்கள். மருத்துவர்கள் உட்பட. இதனால் நிதானமாக மருத்துவம் செய்வார்கள்.
அதுவுமில்லாமல்,  விழுங்கப்பட்ட பொருள் காசா அல்லது பேட்டரியா என்று எக்ஸ்ரேயில் தெளிவாகத் தெரியாது. ஏதோ வட்டமான பொருள் விழுங்கப்பட்டிருப்பதாகத்தான் தெரியும்.
  குழந்தை பேட்டரியை விழுங்கியிருந்தால், அதை எவ்வளவு விரைவாக வெளியே எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது. குழந்தை பேட்டரியை விழுங்கி 5 நிமிடத்தில் வெளியே எடுத்துவிட்டால் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும். அதுவே 1 மணி நேரம் என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும். 3 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே குழந்தை எதை விழுங்கியிருக்கும் என்பதைப் பெற்றோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை எதையாவது விழுங்கிவிட்டது தெரிந்தால், வீட்டில் பயன்படுத்தக் கூடிய பொம்மை, ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் உள்ள பேட்டரி உள்ளதா? என்று முதலில் சோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகு உடனே மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தை அதிகரிக்கும்.
சில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பேட்டரிகளைத் தூக்கியெறியாமல் குழந்தையின் கைக்கெட்டும் தொலைவிலேயே வைத்திருப்பார்கள். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போன்ற செயல் இது. லித்தியம் பேட்டரி உள்ள பொருட்கûளைக் குழந்தையின் கண்களில் படாமல் மறைத்து வைக்க வேண்டும்.
குழந்தைகள் விளையாடும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. புதுப்புது பொருட்கள் வீட்டுக்குள் வருகின்றன. புதிய பிரச்னைகளும் வருகின்றன. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval