Monday, June 27, 2016

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூ.13,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு!'


புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13,000 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.


இது தொடர்பாக வருமான வரித்துறையின் ஆய்வு அறிக்கையில், ''ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கி போன்ற வங்கிகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் கணக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் பிரான்ஸ் அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு வழங்கியது. இதேபோன்ற பட்டியல், 2013 ஆம் ஆண்டில் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் இணையதளத்தில் வெளியானது.

மேற்கண்ட 2 பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், 2011 ஆம் ஆண்டு கிடைத்த பட்டியல் வாயிலாக இந்தியர்கள் ரூ.8,186 கோடி கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அதிக அளவில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்த கணக்குகளை வைத்திருந்த நபர்களிடம் ரூ.5,377 கோடியை வரியாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.

ஹெச்.எஸ்.பி.சி. வங்கியைப் பொறுத்தமட்டில், அங்குள்ள 628 பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. அதில், 213 கணக்குகளில் எந்த பணமும் தற்போது இல்லை. எனவே அந்த கணக்குகள் வைத்துள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில கணக்குகளில் அதை வைத்திருப்போர் யார் என்பது குறித்து வருமான வரித்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

2013 ஆம் ஆண்டு இணையதளத்தில் வெளியான பட்டியல் மூலம், வெளிநாட்டு வங்கிகளில் 700 இந்தியர்கள் ரூ.5,000 கோடியை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் இணையதளத்தில் வெளியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றங்களில் 55 வழக்குகளை வருமான வரித்துறை தொடுத்துள்ளது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கி விவகாரத்தில், 75 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத் துறையும் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியுள்ளது.

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் இணையதளத்தில் வெளியான பட்டியலில் இடம்பெற்றிருந்த தனிநபர்கள், கருப்புப் பணத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதால் நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டனர்" என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval