Monday, March 12, 2018

உதவிக்கரம்

போராடிய விவசாயிகளுக்கு ஒருமைப்பாட்டின் அங்கமாக சீக்கிய, முஸ்லீம் தொண்டர்கள் உணவு கொடுத்து உதவிக்கரம்

மும்பை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நாசிக்கிலிருந்து மும்பை வரை நீண்ட பேரணி நடத்திய மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டுள்ளனர். விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநில விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரம் விவசாயிகள் நாசிக் மாவட்டத்தில் இருந்து கடந்த 6 நாட்கள் நடைப்பயணமாக 190 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மும்பைக்கு வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் 12 பேருடன் அரசு அமைத்துள்ள 6 அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க அரசு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதற்கிடையே ஒருமைப்பாட்டின் எடுத்துக்காட்டாக, dabbawalas , சீக்கிய மற்றும் முஸ்லீம் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து,  நள்ளிரவில் மும்பை வந்தடைந்த விவசாயிகளுக்கு உண்ண உணவும், குடிக்க நீரும் வழங்கி உதவி செய்தனர். சுமார் 6 நாட்களாக கொளுத்தும் வெயில் எனப்பாராது, பாதங்களில் வலியுடனும், மனதில் வேதனையுடனும் விவசாயிகள் நீண்ட நடைபயணம் மேற்கொண்டனர், விவசாயிகளின் வருகைக்காக நள்ளிரவையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் உணவு வழங்க காத்திருந்தனர்.உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் கிடைத்த உணவுகளை தொண்டர்கள் சேகரித்து மும்பை வந்து சிறந்த விவசாயிகளுக்குவழங்கி அவர்களின் பசியை ஆற்றினர்.

இதற்கு முன்னதாக நடைபயணம் மேற்கொண்ட பிறகு மும்பை வந்தடைந்த விவசாயிகளை தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின்னர் விவசாயிகளுக்கு உணவும், நீரும் தொண்டர்கள் வழங்கினர். இவ்வாறு தொண்டர்கள் உதவிக்கரம் புரிந்திருப்பது ஒருமைப்பாட்டின் சிறந்த எடுத்து காட்டாகும் என்றால் அது மிகையாகாது.  
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval