Tuesday, March 14, 2017

தமிழகத்தில் இப்படி ஒரு அரசு மருத்துவமனையா? சும்மாவாவது போய் பார்க்க ஆசையா இருக்கு!

மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தொற்றுநோய் சிறப்பு மருத்துவமனையான, அரசு மருத்துவமனை. காட்டு ஆஸ்பத்திரி என்று பெயர் பெற்றது.
மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் சிறிய சாலையில் இறுதியில் பல ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது இந்த மருத்துவமனை.
1960ம் ஆண்டு முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. காசநோய், காலரா, அம்மை போன்ற நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை என்பதால், ஊருக்கு ஒதுக்கு புறமாக காட்டு பகுதியில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதி என்பதால் செடி, கொடி வளர்ந்து பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதற்கு பயந்து எந்த டாக்டர்களும் இந்த மருத்துவமனைக்கு பணிக்கு வருவது இல்லை.
இதனால் பராமரிப்பு இன்றி காடு போன்று கிடந்தது. இந்த நிலையில், மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன்.
“உண்மையில், நான் விரும்பி இந்த மருத்துவமனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப் பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல் நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு. பஸ் வசதிகூட இல்லை.
ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட `எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத் தாங்க சார்’ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால் வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே வேணாம்.
காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள நோயாளியை அனுப்பிட்டு சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க.
நோயாளிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால், கீழே கால் வைக்கவே சங்கடமா இருக்கும். என்ன செய்றது? எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை.
ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள் வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்’ன்னு கேட்டப்போ, `இந்தப் புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்க’ன்னு சொன்னேன். மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப் புதர்களையும் அகற்றியிருந்தாங்க.
மனசாட்சி, சுருக்குன்னு குத்துச்சு. `யார் பெத்த பிள்ளைகளோ… எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா’ன்னு உறுத்தல். அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன்.
வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க. எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய் வந்தது.
தோப்பூர் மருத்துவமனையில்தான் வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்’னு சொல்லி கண் கலங்கிட்டார்.
அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு.
நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது. அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினேன்.
என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள ஆரம்பிச்சோம். இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கு” என்கிறார் காந்திமதிநாதன்.
தற்போது அரசு மருத்துவமனை ஒரு சோலைவனமாக மாறிவிட்டது. மரங்கள் பராமரிப்பு, நோயாளிகளுக்கு பொதுநூலகம், தையல் பயிற்சி மையம், வார்டுகளில் டி.வி.,எப்.எம்.,ரேடியோ,நோயாளிகளுக்கான விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள் இடத்துக்கே பொருள்களை எடுத்துச் சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நோயாளிகள் வீட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகள் மருத்துவமனை விட்டு வெளியே செல்ல மனம் இன்றி செல்வதை பார்க்க முடிகிறது.
இந்த மருத்துவமனையை பார்த்தாவது, தமிழகத்திலுள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தங்களை மாற்றி கொள்ளவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஆவல்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval