Saturday, November 14, 2015

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டம்

24-venkaiah-naidu
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
வெங்கையா நாயுடு பேச்சு
ஐதராபாத் நகரில் ஆந்திரா–தெலுங்கானா வர்த்தக சபை நேற்று ஏற்பாடு செய்து இருந்த விருது வழங்கும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சமையல் கியாஸ் மானியம் ரத்து
நாட்டில் ஏராளமான பேர் சட்ட விரோதமாக சமையல் கியாஸ் இணைப்பு பெற்று இருந்ததை அரசாங்கம் கண்டுபிடித்து இருப்பதாகவும், அந்த இணைப்புகளுக்கான ‘சப்ளை’யை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சேமித்து இருப்பதாகவும் பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் என்னிடம் தெரிவித்தார்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி ஆலோசிக்கப்படுகிறது. அவர்களுக்கு எதற்கு மானியம் வழங்க வேண்டும்? மந்திரிகளுக்கெல்லாம் சமையல் கியாஸ் மானியம் தேவையா?
இதுவரை 30 லட்சம் பேர் தங்களுக்கு சமையல் கியாஸ் மானியம் தேவை இல்லை என்று விட்டுக்கொடுத்து உள்ளனர். அவர்கள் விட்டுக்கொடுத்த மானியம் ஏழைகளைப் போய்ச் சேரும்.
சீர்திருத்த நடவடிக்கைகள்
இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வருகின்றன. சிறந்த நிர்வாகத்தை வழங்கி நாட்டில் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்பதும் தான் எங்கள் அரசாங்கத்தின் நோக்கம்.
இதற்காக மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான கொள்கையில் 35 மாற்றங்களை செய்து உள்ளது. நாட்டின் நலன் கருதி மத்திய அரசு மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும், செயல்திட்டங்களுக்கும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச அரசு தயாராக இருக்கிறது.
பெரிதுபடுத்தக்கூடாது
நாட்டில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அவற்றை பெரிதுபடுத்தி தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval