Sunday, November 8, 2015

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து சுவிட்சர்லாந்தில் விரைவில்

WEpodcrop_3447373b
சுவிட்சர்லாந்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கக் கூடிய பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
முழுவதும் பேட்டரி மூலம் இயங்கும் இந்த பேருந்தில் ஒரு நேரத்தில் 9 பேர் மட்டுமே பயணிக்க முடியும். போஸ்ட்பஸ் நிறுவனம், ஸ்விஸ் தொழில்நுட்பக் கல்வி நிலைய மாணவர்கள் இணைந்து இந்த பேருந்துகளைத் தயாரித்துள்ளனர்.
முதலில் சோதனை முயற்சியாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட இருக்கின்றன. சியோனில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இடையே முதல் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லாமல் இயங்குவதற்கு வசதியாக இதில் கேமராக்கள் மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்ல வேண்டிய சாலைகளை மிகத்துல்லியமாக அறிந்து கொண்டு இந்த பேருந்துகள் பயணிக்கும். சாலையின் நடுவே தடைகள் ஏதும் இருந்தால் அவற்றையும் உணர்ந்து கொண்டு செயல்படும். சிக்னல்களையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நின்று செல்லும்.
போஸ்ட்பஸ், ஸ்விஸ் தொழில்நுட்பக் கல்வி நிலைய மாணவர்களின் இரண்டு ஆண்டு முயற்சிக்குப் பிறகு இந்த தானியங்கி பேருந்துகள் முழுமையாக தயாராகியுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இந்த பேருந்துகளை இயக்கும் வசதியுள்ளது.
ஓட்டுநர் இல்லாததால், இந்த பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்கள் வரை இந்த பேருந்துகள் பரிசோதனை முறையில் இயக்கப்பட்டன.
பொதுமக்கள் சேவையிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval