Saturday, April 28, 2018

சிகிச்சைக்கு வந்த பெண்களை ஆபாசப் படம் எடுத்த டாக்டர்; இளம்பெண்ணின் கணவரிடம் சிக்கினார்

 மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த டாக்டர் ஒருவர் இன்று செல்போனில் படம் எடுக்கும்போது சிக்கினார்.
மருத்துவர்களை மக்கள் தெய்வத்துக்கு இணையாகப் பார்க்கிறார்கள் என்று 'ரமணா' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்நிய ஆணாக இருந்தாலும் அவர் மருத்துவர் என்பதாலேயே சிகிச்சைக்காக வரும் பெண்கள் மருத்துவரை நம்பி தங்களை சோதிக்க ஒப்புக்கொள்கின்றனர். கண்ணியமிக்க மருத்துவர்கள் அவர்களை நோயாளிகளாக மட்டுமே பார்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
ஆனாலும் சில மருத்துவர்கள் தங்கள் மருத்துவத் தொழிலுக்கே இழிவு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்கின்றனர். டாக்டர் பிரகாஷ் போன்றோர் மருத்துவத் தொழிலுக்கு விரோதமாக நடந்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதே வரிசையில் மயிலாப்பூரில் மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் வரம்பு மீறி செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்து சிக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (35). இவர்  சிற்றுண்டி விடுதி நடத்தி வருகிறார். பிராங்க்ளின் மனைவி அமலா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அமலாவின் தாய் மயிலாப்பூர் ரூதர்புரத்தில் வசித்து வருகிறார். நேற்று காலை தனது தாயாரைப் பார்ப்பதற்காக அமலா மயிலாப்பூர் வந்துள்ளார்.
சென்னை வந்த அவருக்கு திடீரென மார்பில் வலி தோன்றியுள்ளது. உடனடியாக கணவரிடம் கூறியுள்ளார். 'பக்கத்தில் கைராசிக்கார டாக்டர் சிவகுருநாதன் இருக்கிறார் அவரிடம் செல்லுங்கள்' என்று அமலாவின் தாயார் கூறியுள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை அமலா அவரிடம் சிகிச்சை பெற்றதால் அவரிடம் சிகிச்சைக்காக நேற்று மாலை 7 மணி அளவில் தனது கணவருடன் சென்றுள்ளார்.
மயிலாப்பூர் நாட்டு சுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் நடத்தி வரும் டாக்டர் சிவகுருநாதன், எம்டி படித்த மூத்த டாக்டர். 64 வயதானவர். அவரது கிளினிக்கில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அவரிடம் சிகிச்சைக்காக சென்ற அமலாவைப் பரிசோதித்த டாக்டர் சிவகுருநாதன் அவரின் அழகில் மயங்கியுள்ளார்.
மார்பில் வலி இருப்பதாக கூறியவுடன் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிவகுருநாதன், அவரது கணவர் பிராங்க்ளினிடம் 'வெளியே இருங்கள்,  நான் இவர்களை சோதிக்க வேண்டும்'என்று கூறியுள்ளார். அவரும் வெளியே போய் அமர்ந்துள்ளார். யதேச்சையாக உள்ளே பார்த்தவர் அதிர்ந்து போயுள்ளார்.
டாக்டர் தனது செல்போன் கேமராவை அமலாவுக்கு தெரியாமல் தயார் செய்து வைத்துவிட்டு அவரை சோதிப்பது போல் ஆபாசமாகப் படம் பிடித்துள்ளார். இதைப் பார்த்தவுடன் ஆத்திரமடைந்த கணவர் பிராங்க்ளின் சட்டென்று அறைக்கு உள்ளே சென்று, 'என்ன செய்கிறீர்கள்?’ என்று சிவகுருநாதனை கேட்க, 'நோயாளியைப் பார்க்கும் போது நீ ஏன் உள்ளே வந்தாய் வெளியே போ' என்று டாக்டர் சீறியுள்ளார்.
'நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என் மனைவியை ஏன் செல்போனில் படம் எடுக்கிறீர்கள்?' என்று பிராங்க்ளின் கேட்க, அப்போது தான் அமலாவுக்கு நிலைமையின் விபரீதம் புரிந்துள்ளது. உடனே சுதாரித்து எழுந்தவர், 'ஏன் படம் பிடித்தாய்?' என்று டாக்டரைப் பிடிக்க செல்போனை பிராங்க்ளின் பிடுங்க முயற்சிக்க உஷாரான டாக்டர் சிவகுருநாதன் உடனடியாக செல்போனில் தான் பிடித்த காட்சிகளை அழித்துவிட்டார்.
பின்னர் செல்போனில் உள்ள மெமரி கார்டையும் பிடுங்கி வெளியே எறிந்துவிட்டார். உடனடியாக பிராங்க்ளின் டாக்டரிடமிருந்த மற்றொரு செல்போனைப் பிடுங்கி சோதனையிட அதிலும் சிகிச்சைக்கு வந்த பெண்களை படம்பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
சிகிச்சைக்கு வந்த பல அப்பாவிப் பெண்களை பல்வேறு கோணத்தில் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக பொதுமக்கள் அவரைப்பிடித்து மயிலாப்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனை சோதித்தபோது அதில் 60-க்கும் மேற்பட்ட படங்கள், வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சைக்காக வரும் அழகான பெண்களை பார்த்தவுடன் அவர்களை அமரச் சொல்வாராம், ஸ்டெதஸ்கோப்பை வைத்து சோதிப்பது போல் செல்போன் கேமராவை ஆன் செய்து தயாராக இருக்கும் ஒரு பெட்டியில் வைத்து விடுவாராம். மருத்துவர் சோதிக்கிறார் என்று நம்பும் பெண்களை இவ்வாறு எடுத்து மருத்துவத் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
டாக்டர் சிவகுருநாதன் ஏற்கெனவே இதே போன்று சில மாதங்களுக்கு முன் படமெடுத்து சிகிச்சைக்கு வந்த பெண்கள் கையால் அடிவாங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்போது யாரும் போலீஸில் புகார் கொடுக்காததால் துணிந்து தனது செயலை அரங்கேற்றியுள்ளார். அவரை கைது செய்த போலீஸார் அவர் மீது 354(எ) (அடுத்தவர் அனுமதி இன்றி ஆபாசமாகப் படம் பிடித்தல்), 354 (சி) (அடுத்தவர் அனுமதியின்றி மறைந்திருந்து படம் எடுத்தல்) 4 (எச்) பெண் வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
courtesy;The Hindu Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval