Tuesday, October 6, 2015

பல்கலைக் கழகத்தின் அலட்சியம்; பலியானது 3 உயிர்கள்!

madurai accident 550 22
தனியார் பேருந்தின் அதீத வேகத்தினால் 3 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என காமராஜர் பல்கலை மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
தேனி செல்லும் மெயின்ரோட்டில் காமராசர் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. முகப்பு நுழைவு வாயிலை ஒட்டினாற்போல் அமைந்திருக்கும் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பேய் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. வாகனம் மோதி இதுவரை பல மாணவர்கள் இறந்துள்ளனர். அங்கு ஒரு பாலம் போட்டு மாணவர்கள் நிம்மதியாக சென்று வர வழி ஏற்படுத்த வேண்டுமென்று மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறார்கள். ஆனால், பல்கலை நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பி.பீ.குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரியில் செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் கங்காதேவியும், கொடைக்கானலை சேர்ந்த ரபியத்துல் பசிரியா என்பவரும் 3–ம் ஆண்டு படித்து வந்தனர்.
இன்று காலை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வந்த ரபியத்துல் பசிரியா, தோழி கங்காதேவிக்காக பல்கலைகழக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கங்காதேவி தனது தந்தை அன்பழகனுடன் டூவீலரில் அங்கு வந்தார். அங்கு மூவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் டூவீலர் மீது பலமாக மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தூக்கி வீசப்பட்ட கங்காதேவியும் ரபியத்துல் பசிரியாவும் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவிகள் 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரபியத்துல் பசிரியா பரிதாபமாக இறந்தார். கங்காதேவியும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பஸ் டிரைவர் ஜெயராமை தேடி வருகின்றனர்.
மாணவர்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, அதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் 3 உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval