Friday, October 30, 2015

தமிழகத்துக்கு கிடைப்பார்களா எளிமைத் தலைவர்கள்?


achu(1)அண்மையில் இரண்டு சம்பவங்களை கேட்க நேர்ந்தது அல்லதுபடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கண்ணூர் ரயில் நிலையத்தில், சாதாரணமாக ஒரு பிளாட்பார்ம் திண்ணையில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருப்பது போல ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் சுற்றி கொண்டிருந்தது.
மற்றொரு சம்பவம் நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருந்த ரயிலில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி பயணம் செய்து கொண்டிருந்தார். திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு முன்னதாக ஒரு ரயில் நிலையத்தில், முதல்வர் வந்த ரயில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கிறது. முதல்வரும் 40 நிமிடங்கள் மக்களுடன் மக்களாக ரயில் புறப்படும் என்று காத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ரயில் இனிமேல் செல்லப் போவதில்லை. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக இத்துடன் நிறுத்தப்படுகிறது என்ற தகவல் கிடைக்கிறது. தொடர்ந்து முதல்வர் உம்மன் சாண்டியும், மக்களுடன் மக்களாக ரயிலில் இருந்து இறங்கி நடந்து செல்லத் தொடங்கி விட்டார். பின்னர் அரசு கார், அவர் இறங்கிய ரயில் நிலையத்துக்கு வந்து முதல்வர் உம்மன் சாண்டியை அழைத்து சென்றது. மக்களுடன் பழகும் முதல்வர்கள் அங்கே இருக்கின்றனர். மக்களின் குறைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அதனால்தான் எனக்கு மதுவால் கிடைக்கும் வருமானத்தை விட, என் மக்களின் உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று அந்த முதல்வரால் பேச முடிகிறது.
ஒருகாலத்தில் தமிழகத்திலும் அது போன்ற தலைவர்கள் இருக்கத்தான் செய்தனர். காமராஜர், கக்கன் போன்ற எளிமை நிறைந்த மக்களுக்காக உழைத்த தலைவர்கள் நிறைந்த மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. ஆனால் தமிழக அரசியலில் தனிநபர் துதிபாடும் தன்மை என்று அதிகரித்ததோ, அன்று முதலே இங்கே நிலைமை மாறத் தொடங்கி விட்டது. இப்போது ஒரு சாதாரண வார்டு கவுன்சிலரை சந்திப்பது கூட சாதாரண விஷயமாக இல்லை.
நல்லக்கண்ணு என்ற மூத்தத் தலைவர் தாமிரபரணியை காக்க போராட்டம் நடத்தி கொண்டிருந்த வேளையில், சேலத்தில் நடிகை நயன்தாரா ஒரு நகைக் கடையை திறந்து வைக்க சென்றார். நல்லக்கண்ணுவின் பின்னால் 10 பேர் கூட இல்லை.
ஆனால் நயன்தாராவை காண, சேலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போலீசார் தடியடி நடத்தும் நிலை வரை சென்றது. இன்றைய காலக்கட்டத்தில் நடிகை நயன்தாராவை எதிர்த்து நல்லக்கண்ணு தேர்தலில் போட்டியிட்டால், நல்லக்கண்ணு தோற்று விடுவாரோ? என்ற பயமும் எழாமல் இல்லை.
நன்மக்கள் நிறைந்த சமூகத்தில் இருந்துதான் நல்ல தலைவர்கள் உருவாகி வருவார்கள். தமிழகம் ஏனோ அத்தகைய சமுதாயத்தை இழந்து விட்டதோ என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval