Monday, October 26, 2015

ஓட்டுநர், நடத்துநரின் மனிதாபிமானம் பயணிகள் பாராட்டு

busபயணத்தின்போது வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தி லிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து மதுரைக்குப் புறப்பட்டது. மதுரை கோட்டம் அருப்புக்கோட்டை கிளையிலிருந்து இயக்கப்படும் அந்தப் பேருந்தில் ஓட்டுநர் ராமர், நடத்துநர் பாஸ்கரன் பணியாற்றினர்.
பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் சேலத்திலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபினவதனுக்கு காய்ச்சல் அதிக மாகி, வலிப்பு ஏற்பட்டது. இதனால் குழந்தை யின் பெற்றோர் செய்வதறியாது தவித் தனர்.
பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சக பயணிகள், இதுகுறித்து நடத்துநரிடம் தெரிவித்தனர். அப்போது அந்தப் பேருந்து பஞ்சப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது.
திருச்சி நகர எல்லையைத் தாண்டினால் மருத்துவமனை இருக்காது என்பதால், மீண்டும் பேருந்தை திருச்சிக்கு திருப்பினர். எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேருந்தை நிறுத்தினர். அங்கு குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சக பயணிகள் பொறுமையாக காத்திருந்தனர்.
பின்னர், “குறைந்தபட்சம் சில மணி நேரமாவது குழந்தை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்” என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதால், அந்த தம்பதியை அங்கேயே விட்டுவிட்டு, சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து மீண்டும் மதுரைக்குப் புறப்பட்டது.
சரியான நேரத்தில் சிகிச்சை
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண்குமார் கூறும்போது, “வலிப்பு முற்றியிருந்தால் குழந்தை சுய நினைவை இழந்திருக்கும். மூளையில் லேசான பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம். இதனால், குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது.
ஆனால், குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்ததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உரிய நேரத்தில் குழந்தையைக் கொண்டு வந்து காப்பாற்றி யுள்ளனர்” என்றார்.
பயணிகள் பாராட்டு
பணிச்சுமை, பல்வேறு கட்டுப்பாடுகள், அதிகாரிகளின் அதிரடி உத்தரவுகள் என்று பல்வேறு மனஉளைச்சல்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் நிலையிலும், எதைப் பற்றியும் யோசிக்காமல் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட்ட பஸ் ஓட்டுநர் ராமர், நடத்துநர் பாஸ்கரனுக்கு பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval