Friday, October 16, 2015

கடந்தவாரம் இங்கிலாந்து சென்றிருந்த பொழுது,


Birmingham"பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள நூலகம்-Vatican Library மற்றும் Parisல் உள்ள France National Library ஆகியவற்றை அடுத்து, பலநூற்றாண்டுகளுக்கு முந்தய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான நூல்களின் மூலக் கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்துவைத்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய நூலகமாகும். அங்குதான், இந்தப் பொக்கிஷத்தைக் காணும் பாக்கியம் கிடைத்தது. இதுவே- இதுவரை கிடைத்துள்ள புனித அல்-குர் ஆனின் மூலக் கையெழுத்துப் பிரதிகளில் பழமையானது என்று நம்பப் படுகிறது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல்Edward Cadbury(பலரும் ஆசை ஆசையாய் சாப்பிடும் Cadbury Chocolate நிறுவனத்தின் பிதாமகர்) அவர்கள் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட Alponse Mingana என்பவர் கைகளில் தான், இந்த அரிய கையெழுத்துப் பிரதி கிடைக்கபெற்றுள்ளது. Radio Carbon எனும் நவீன தொழிநுட்ப முறைமூலம் இதனை ஆராய்ந்து அறிந்ததில், இது 568 முதல் 645ம் ஆண்டுகாலப் பகுதியில் இது எழுதப் பட்டிருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். அவ்வாறெனில் நபிபெருமான் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்திருத்த காலத்தில், அவருக்கு வந்திறங்கிய இறைவசனங்களை அவரது வாய்மொழி மூலம் கேட்டு எழுதப்பட்ட பிரதிகளுள் ஒன்றாயிருக்கலாம் என்று அனுமானிக்கின்றார்கள். அக்டோபர் 2 முதல் 25 வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருத்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷத்தை அக்டோபர் 7ம் திகதி நேரில் சென்று காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இப்பொக்கிஷத்தைத் தேடிக் கண்டெடுத்தவரும், அதற்குப் பொருளதவி செய்தவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்களல்ல. அதுபோல் இவ்வரிய ஆவணத்தைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களில் 90% வீதமானவர்களும்,இஸ்லாமியர்கள் அல்ல. மதமாச்சரியங்கள் கடந்து, புனிதமிகு இந்த வரலாற்று ஆவணத்தைக் காண வந்திருந்தவர்களைப் பார்த்து வியந்து, நம் எல்லோரையும் படைத்த அந்த ஏக இறைக்கு நன்றியைத் தெரிவித்தேன்.
(இவ்வரிய அனுபவத்தினைப் பெற எனக்குதவிய நண்பர்கள், திரு நிமால் சண்முகநாதன், திரு மயூரன் ஆகியோருக்கு வல்ல இறை நல்லருள் புரிவானாக)
B.h. Abdul Hameed

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval