Friday, September 18, 2015

அந்நிய முதலீட்டால் யாருக்கு லாபம்?

advertising-forecastஅந்நிய முதலீடு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது
எங்கு நோக்கினும் வளர்ச்சி முழக்கங்கள். அந்நிய முதலீடு… அந்நிய முதலீடு… எனும் கோஷங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உண்மையிலேயே உதவி செய்கின்றனவா?
கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் நிகர மூலதன உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு வெறும் 10% அளவில்தான் இருக்கின்றன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கிற தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. நிகர மூலதன உருவாக்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்தே வெளியேறிவிடக்கூடிய நிலைமை உருவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
லாபம்தான் குறிக்கோள்!
எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே. அதுவும் அந்நிய முதலீடு என்னும்போது சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே. அதிலும் அந்நிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் நீண்ட கால நடைமுறைக் கொள் கையை அடிப்படையாகக்கொண்டது. அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறை களை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவு களுக்கு மாற்றுத் தீர்வழிகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்புக்கு முயற்சிகளை மேற்கொள் கின்றன. முதலீடு செய்யப்படும் நாடுகளும் அதை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக் கல்ல. ஆனால், தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப் போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக, முதலீட்டின் அளவு அதிகரிப்பதைத் தமது சாதனையாக முன்னிறுத்துகிறது.
1990-களுக்குப் பிறகு, அந்நிய முதலீட்டுக்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
1999-ல் கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கு இடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர் தமது உள்ளூர் கூட்டாளிகளின் துணைகொண்டு கம்பெனி நடவடிக்கைகளில் வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் – சட்ட விரோதம்!
இருவேறு நிறுவனங்களுக்கு இடையே எழும் வழக்குத் தகராறுகள் நீதிமன்றத்துக்குச் சென்று கால தாமதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்திட, இசைவுத் தீர்ப்பாயம் மற்றும் சமரச முறைகளை மாற்றீடாக அரசே பரிந்துரைக்கிறது. இவற்றோடு தொழிலாளர்களிடம் இருந்த ஒரே ஆயுதமான வேலைநிறுத்தம் செய்யும் உரிமை யும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும் கூட, இவை எல்லாம் போதாது, இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தாராளமயத்தை ஆதரிக்கும் சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
அண்டை நாடான சீனா, உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 10%-ஐப் பெற்றிருந்தாலும், இந்தியா அளவுக்குப் படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ள வில்லை. அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட மற்ற எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே நிலைதான். மிகக்குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதன் மூலம் முதலீட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவைப் பெருமளவு குறைத்துவிடுகின்றன. அதைப்போலவே அந்நிய முதலீடு செய்யப்படும் நாடுகளில் மட்டுமின்றி, அந்நாட்டோடு ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளையும் சேர்த்து, தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விநியோகிப்பதற்கான விரிந்து பரந்த சந்தைப் பரப்பையும் எளிதாகச் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு உற்பத்தி, விநியோகம் என்று இரண்டு நிலைகளிலும் கிடைக்கிற லாபம் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
மீள்வது சுலபமல்ல
அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் தமது முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பைக் கவனத்தில் கொள்ள நேரும்போது, தாம் வணிக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுகளுடனான அயலுறவுக் கொள்கையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து விட முடியாது. அவசியமற்ற அரசியல் அழுத்தமொன்றை ஒரு நாடு வலிந்து ஏற்றுக்கொண்ட பின்னால், அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடுவதில்லை.
பன்னாட்டு வணிகப் போட்டியைச் சமாளிக்க இயலாத நிலையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதுதான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான ஒரே வாதம். ஆனால், உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்டுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதித்து, இருக்கிற வாய்ப்புகளை இழந்துவிட்டதோடு, அதை அந்நியர்களுக்கு அளித்துவிட்டது இந்திய அரசு. வங்கித் துறையில் 74% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டாகிவிட்டது. காப்பீட்டுத் துறையிலோ 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பு விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அவர்களது உற்பத்திப் பொருட்களின் விற்பனை அளவும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், எவ்விதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
100% முதலீடு வெற்றியா?
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். இரும்பு மற்றும் எஃகு உருக்காலைகள் உள்ளிட்ட ஆதாரத் தொழில் துறைதான் உற்பத்தித் துறை இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதிகளவு முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிற இந்தத் துறைதான் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரிக்கிறது. இந்த ஆதாரத் தொழில்துறையின் தேவை என்பதும்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. இத்துறையில் 1985-யே 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் 2000 தொடங்கி 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் இத்துறையில் செய்யப்பட்ட முதலீடு வெறும் 4% மட்டுமே.
அந்நிய நேரடி முதலீட்டால் தொழில்நுட்பப் பரிமாற் றங்கள் நடக்கும், அதன் காரணமாக உள்நாட்டுத் தொழில் துறையின் தொழில்திறன் மேம்படும் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு உடன்படிக்கை களை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டுள்ள அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்களின்படி, காப்புரிமைச் சட்டங்கள் வணிகத்தில் ஏகபோக உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவே உதவும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் யாவும் இனி அதன் கண்டுபிடிப்பாளருக்கே முழுவுரிமை கொண்டதாக இருக்கும். அத்தொழில் நுட்பத்தைப் பிறிதொருவர் பயன்படுத்த வேண்டுமெனின் அதற்கான காப்புரிமைத் தொகையை அளித்தாக வேண்டும். அதாவது, உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பது போலவே தொழில்நுட்பமும் அதற்கான விலையைப் பெற்றுக்கொண்ட பிறகே பரிமாற்றம் செய்யப்படும். அதுவும் ஒரு வணிகமே.
இன்றைக்கு ஏதாவது ஒரு வழியில், எப்படியாவது அந்நிய முதலீட்டைக் கவர்வது ஒன்றே மத்திய – மாநில அரசுகளின் முக்கியமான பணியாக இருக்கிறது. அந்நிய முதலீடு என்கிற நாற்றினை எங்கிருந்தோ கொண்டுவந்து இங்கே ஊன்றி, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, அறுவடையும் முடித்துப் பலனை எங்கோ கொண்டுபோவதில் வயல்காரனுக்கு என்னதான் பயன்? இவனுக்கு குத்தகையும் இல்லை, கூலியும் நிரந்தரமில்லை!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval