Thursday, September 10, 2015

மனைவியை கொன்று, நண்பரின் மனைவியை அடைய முயன்ற என்ஜினீயர் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்து கைதானவரின் திடுக்கிடும் மோசடிகள் அம்பலம்


பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.


வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. 2 விமான நிலையங்களிலும் 7 சர்வதேச விமானங்கள் இதனால் தாமதமாக புறப்பட்டன.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

இதைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். செல்போன் எண்ணை வைத்து விசாரித்து, பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்துவரும் கேரளாவை சேர்ந்த கோகுலை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும், கோகுல் மிரட்டலுக்கு பயன்படுத்திய சிம்கார்டை, தான் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் கேரளாவை சேர்ந்த தனது நண்பர் ஒருவரின் முகவரியை பயன்படுத்தி வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

நண்பர் மூலம் தெரிந்தது

செல்போன் எண் பதிவுபெற்றிருந்த அந்த நண்பரிடமும், அவரது மனைவியிடமும் தான் முதலில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் கூறிய தகவலை வைத்து போலீசார் கோகுலை கைது செய்தனர். 

கோகுலிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் தனது நண்பரின் மனைவியான ஷாலினியை (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அடைவதற்காக ஏற்கனவே தனது மனைவி அனுராதாவை கொலை செய்துவிட்டு, அதனை திசைதிருப்பியது தெரியவந்தது. அதே காரணத்துக்காக நண்பரையும் போலீசில் சிக்கவைக்க விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.

5 ஆண்டுகளாக திட்டம்

இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் பல்வேறு சதித்திட்டங்கள் நடத்தி உள்ள அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன. இதுகுறித்து கோகுல் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், ஷாலினியும் 12-ம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். ஷாலினி திருச்சிக்கு சென்றார்.

காதல் திருமணம்

டெல்லியில் இருந்தபோது எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். அதே ஆண்டிலேயே ஷாலினிக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். ஷாலினி தனது கணவருடன் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்துவந்தார். 

வேலை, திருமணம் போன்ற காரணங்களால் எனக்கும், ஷாலினிக்கும் இருந்த தொடர்பு துண்டித்தது. இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன். நான் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வேலைபார்த்தேன்.

மனைவியின் கள்ளக்காதல்

அப்போது அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தான் எனது வாழ்க்கையில் மோசமான திருப்பங்கள் ஏற்பட்டது. 

அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. 2011-ம் ஆண்டு ஷாலினியுடன் மீண்டும் ‘பேஸ்புக்’ மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். இதற்காகவே பெங்களூருக்கு சில முறை சென்றேன். ஆனால் அதற்கு ஷாலினி இடம் கொடுக்கவில்லை. 

கொலை செய்ய திட்டம்

ஷாலினியை அடைவதற்கு எனது மனைவியும், ஷாலினியின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

முதலில், என்னை நல்லவனாகவும், எனது மனைவி தவறான நடத்தை கொண்டவள் என்பதையும் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டான அவளுடைய தந்தையிடம் உணர்த்த முடிவு செய்தேன். அதன்படி, 2011-ம் ஆண்டு பாபா என்ற பெயரில் ஒரு இ-மெயில் முகவரியை போலியாக தொடங்கி, அதிலிருந்து எனது மனைவிக்கு இ-மெயில் அனுப்பி அவளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். 

ஆதாரங்களை திரட்டினேன்

அப்போது அவளுக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அனுராதா, நான் தான் பாபா என்பது தெரியாமல் மெயில் மூலம் தெரியப்படுத்தினாள். இதேபோல், ‘ஜோதிடர் ஆஷா’ என்ற இன்னொரு இ-மெயில் முகவரி வழியாக எனது மனைவியுடன் தொடர்புகொண்டேன். அப்போது, உங்களின் குறைகளை என்னிடம் தெரிவித்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன் எனக் கூறினேன். 

அப்போதும் அனுராதா தனது கள்ளக்காதல் விவகாரத்தை மறுபடியும் என்னிடம் தெரிவித்தாள். அதற்கு நான், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். அந்த புகைப்படத்தை வைத்து பூஜை செய்தால் உங்களது கணவர் உங்களை நெருங்க மாட்டார்’ என தெரிவித்தேன். 

அதை உண்மை என நம்பிய அனுராதா தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினாள். இதற்காகவே அனுராதா டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து இருவரும் குளிப்பது போன்ற படங்களை எடுத்து அனுப்பியிருந்தாள். இந்த புகைப்படங்களை நான் சேகரித்து அவளுக்கு எதிரான ஆதாரங்களாக திரட்டினேன்.

பெங்களூருக்கு இடமாற்றம்

கடந்த ஆண்டு(2014) ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன். இதனால் நான் ஷாலினி தனது கணவனுடன் குடியிருக்கும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கினேன். ஷாலினியின் கணவருடன் பழகி நண்பனாக்கிக்கொண்டேன். இதன்மூலம் ஷாலினியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தேன். 

கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி நான் எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன். 

கொலை செய்தேன்

இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். 

பின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா போலீசில் மர்மசாவு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை. போலீசாரின் சந்தேகம் என் மீது இருந்தாலும், எனது மாமனார் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் போலீசாரிடம் எனக்கு ஆதரவாக பேசினார்.

கணக்கு தப்பானது

அனுராதா இறந்ததால் அடுத்து ஷாலினியின் கணவரை என்ன செய்யலாம்? என சிந்தித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல ஷாலினிக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் ஷாலினிக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, பின்னர் இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். பின்னர் இதேபோல ஷாலினியின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

அடுத்ததாக ஷாலினி கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து நைசாக திருடினேன். அதனை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன்.

அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், போலீசார் ஷாலினியின் கணவரை கைது செய்து விடுவார்கள் என நினைத்து அந்த செயலை அரங்கேற்றினேன். ஆனால், போலீசார் ஷாலினியிடமும், அவரது கணவரிடமும் விசாரணை நடத்தியதில் இதற்கெல்லாம் காரணம் நான் தான் என்பது தெரிந்துவிட்டது. எனது கணக்கு தப்பாகி போனதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நானே போலீசில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கோகுல் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

2 வாரம் போலீஸ் காவல்

திரில்லர் சினிமா கதைகளையும், மர்ம நாவல்களையும் மிஞ்சும் வகையில் என்ஜினீயர் கோகுல் கொலையையும், வெடிகுண்டு மிரட்டலையும் சாமர்த்தியமாக அரங்கேற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விசாரணை தற்போது கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அனுராதா மர்மசாவு வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலை 2 வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையிலும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.  
courtesy;Daily Thanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval