Wednesday, March 16, 2016

தமிழகம் முழுவதும் 17,350 ரவுடிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது: சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்

Daily_News_4542156457902சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும்  உள்ள 17,350 ரவுடிகள் வெளியேற்றப்பட உள்ளனர். அவர்களின் பட்டியல் தயாராகி விட்டது. ரவுடிகள் அனைவரையும் வெளியேற்றும் பணி தொடங்கி  உள்ளது. இதன்படி, சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி போலீஸ் டி.ஜி.பி.க்கு  தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அதாவது, தேர்தல் முடியும் வரை சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை ஊரை விட்டு  வெளியேற்றலாமே? என்று தேர்தல் ஆணையம் யோசனை வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த 2012ல் தமிழகத்தில் 16,500 பேர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தற்போது உளவுத்துறை தயாரித்துள்ள ரவுடிகள் பட்டியலில் 20 சதவீதம் பெயர்கள் தற்போது  அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 3,500 பேரும், குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 345 பேரும் ரவுடிகள் பட்டியலில்  உள்ளனர். இதேபோல் நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் 1,980, மதுரை மாவட்டத்தில் 1,300, கன்னியாகுமரி மாவட்டத்தில் 748, கோவை  மாவட்டத்தில் 815, சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 700 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 416 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 475,  விருதுநகர் மாவட்டத்தில் 655, தூத்துக்குடி மாவட்டத்தில் 605 பேர் என ரவுடிகள் பட்டியலில் சுமார் 17,350 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சமூக விரோதிகள், ரவுடிகள், பிரச்னையை தூண்டுபவர்கள் என பல்வேறு வகையின் அடிப்படையில் இந்த பட்டியலை உளவுத்துறையினர் தயாரித்து  வழங்கியுள்ளனர். எனவே, குற்றப் பின்னணியில் உள்ள இந்த ரவுடிகளை சட்டமன்ற தேர்தலையொட்டி, ஊரை விட்டு வெளியேற்றினால் என்ன?  என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை, ஊரை விட்டு  வெளியேற்றலாமா? என்று உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், ரவுடிகள் அனைவரையும் சொந்த ஊரில் இருந்து வேறு  இடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக பட்டியலில் உள்ள அனைத்து ரவுடிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் வெளியேறவில்லை என்றால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று சென்னையில் 3,500 ரவுடிகளுக்கும் சம்மன் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. அவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் சென்னையை  விட்டு அப்புறப்படுத்தப்பட உள்ளனர். இந்த பணி ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள ஜெயக்குமாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் ரவுடிகளை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இதனால், ரவுடிகள் சொந்த இடத்தில் இருந்து வேறு  இடத்திற்கு இடம் பெயர தொடங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval