Sunday, March 20, 2016

நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய

Image result for indian bond imagesஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பத்திரப் பதிவின் அவசியம் என்ன?
பத்திரப்பதிவின் நோக்கம் ஒரு வீட்டை, ஒரு கடையை, ஒரு நிலத்தை, ஒரு சொத்தை இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றுக்கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரமே. அதாவது பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம். ஆனால் பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதே அது முழுமையாகும்.
எங்கே பதிவு செய்வது?
சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
என்னென்ன இணைக்க வேண்டும்?
விற்பவர், வாங்குபவர் இருவரின் முகவரிச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரின் அடையாளச் சான்று
விற்பவர், வாங்குபவர் இருவரும் ஆளுக்கொரு சாட்சியை அழைத்துவர வேண்டும் அல்லது வாங்குபவர் மட்டுமே இரண்டு சாட்சிகளை அழைத்துவரலாம்.
விற்பவர், வாங்குபவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.
பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.
முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்பட வேண்டும்?
முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்குண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
வாங்குகிற இடத்தின் அளவு, அது இருக்கும் திசை, அதைச் சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
நிலம், கட்டிடம் ஆகிய சொத்துக்களை விலை கொடுத்து வாங்கினாலோ அல்லது குத்தகைக்கு ஒப்பந்தம் செய்தாலோ முறைப்படி பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பத்திரப்பதிவின்போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு அதன்படி முத்திரைத்தாளில் எழுதவேண்டும். வாங்கும் சொத்து மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட வேண்டும்.
சொத்து மதிப்பில் இருந்து எட்டு சதவீதத்தை முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும் (நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவீதத் தொகைக்கு முத்திரைத்தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் சந்தை மதிப்புத் தொகை பதிவுக்கட்டணமாகவும் பெறப்படும்.)
சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும் சிலர் ஒப்பந்தம் செய்து கொள்வதுண்டு. இதற்கு ஒப்பந்தம் செய்ய 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய 50 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும். பதிவுக்கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் பல்வேறு காரணங்களால் தனது சொத்துக்களின் மீதான உரிமையை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ, பராமரிப்பதற்கோ பவர் ஆஃப் அட்டர்னியாக ஒருவரை நியமிப்பதுண்டு. இத்தகைய அதிகாரம் வழங்கினால் இதற்கான முத்திரைத்தாள் கட்டணமாக அசையா சொத்துக்கு 100 ரூபாயும், பதிவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவே அசையும் சொத்துக்கு (நகை போன்றவற்றிற்கு) முத்திரைத்தாள் கட்டணம் 100 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை:
*ஒருவர், தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.
*எந்தப் பகுதியில் இடம் அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட வேண்டும்.
*பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம் சென்று, பத்திரப்பதிவுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
*முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து, விவரங்கள் ஏதேனும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டுமெனில் அதனைத் திருத்தம் செய்துகொண்டு இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.
*முன்தொகை போக, மீதமுள்ள தொகையை பத்திரப்பதிவு செய்யும் நாளில் கொடுக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
*பத்திரப்பதிவு செய்யும் சிலமணி நேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விட வேண்டும்.
* பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதைக் கேட்டு வாங்க வேண்டும். பின்னர் அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து, பத்திரத்தை வாங்கிவிட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கியதும் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval