Saturday, March 12, 2016

தென்காசி அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சிறையில் அடைப்பு

Daily_News_7267681360245நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் கோதைலட்சுமி (வயது 23). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை ஆகும். இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி உத்தரவிட்டார். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் நேற்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, ‘நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்–மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று உருக்கமாக கூறி உள்ளார்.
இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் சிசுப்பிரமணியன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
சிவசுப்பிரமணியனின் தாயார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளால் வரும் திங்கட்கிழமை சிவசுப்பிரமணியனை போலீசார் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஆஜர்படுத்த உள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval