Monday, August 20, 2018

சட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!

Image may contain: one or more people and textசட்டென மாறிய கடலூர் காவல்துறை: மாற்றிய எஸ்.பி!
காவல்துறை என்றாலே லஞ்சம் வாங்கும் துறை என்ற அபிப்ராயம் பொதுமக்களிடையே ஏற்பட்டு வெகு காலமாகிவிட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்.பி.) சரவணன் தனது தீவிர, நடவடிக்கைகளால் மாவட்டத்தில் லஞ்சத்தைப் பெருமளவு ஒடுக்கியுள்ளார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.
நம்ப முடியாமல்தான் விசாரணையில் இறங்கினோம்.
கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக சரவணன் பொறுப்பேற்று சரியாக இரண்டு வாரம் முடிந்துவிட்டது. இப்போது மாவட்டத்தில் சாராயம், கள்ளச் சந்தையில் பீர் பிராந்தி, கஞ்சா, சூதாட்டம், லாட்டரி, திருட்டு மணல் போன்ற சமூக விரோத செயல்பாடுகள் பெரும்பாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக காவல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எஸ்.பி. சரவணனின் எச்சரிக்கையால் கை நீட்டவே பல போலீஸார் பயப்படுகிறார்கள்.
அப்படி என்ன செக் வைத்தார் எஸ்.பி. என்று கடலூர் காக்கிகளிடமே பேசினோம்.
“கடலூர் மாவட்ட எஸ்.பி. யாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொறுப்பேற்றதும் கீழ்மட்ட அதிகாரிகளுடன் மனம்விட்டு பேசினார் எஸ்.பி. ‘இதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தீங்களோ எனக்குத் தெரியாது. இனிமே லஞ்சம் வாங்கக் கூடாது. இல்லீகல் எதுவும் நடக்கக்கூடாது. நான் நேர்மையா இருக்கிற மாதிரி, நீங்களும் நேர்மையா இருங்க. அப்படி இருக்க முடியாதுன்னா சொல்லிடுங்க, வேற மாவட்டத்துக்கு நானே மாத்தி விட்டுடறேன்’ என்று போலீஸாருக்கு எச்சரிக்கை கலந்த அறிவுரை சொல்லியிருக்கிறார் எஸ்.பி. சரவணன்.
அடுத்த கட்டமாக பயிற்சி எஸ்.ஐ.கள், கம்யூட்டர் ஆப்ரேட்டர்களை அழைத்து தனியாக ஒரு மீட்டிங் நடத்தினார். அப்போது அவர்களிடம், ‘நீங்க இப்பவே நேர்மையா இருந்தால்தான் போகப் போக உங்களுக்கு பெரும் பதவிகளும், நல்ல பேரும் கிடைக்கும். வரும் புகாரை உடனே விசாரித்து நடவடிக்கை எடுங்க. தயவுசெய்து யாரிடம் கை நீட்டாதீர்கள். மீறினா, பணி நீக்கம் செய்துவிடுவேன். பத்து லட்சம் மதிப்பில் ஹை-வே பாட்ரல் வண்டி வாங்கிக் கொடுத்தா அதை ரோட்ல நிறுத்தி பிச்சை எடுக்கிறார்கள்” என்று கடிந்துகொண்டார்.
இதையெல்லாம் விட எஸ்.பி. சரவணனின் அதிரடியான நடவடிக்கைதான் காவல்துறை மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எஸ்.பி. அதிரடிப் படையில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள செல்லத்துரை, மஜித், இப்ராகிம் பாஷா, சதீஷ், அருண்குமார் உட்பட ஐந்து போலீஸாரை அழைத்து அனைவருக்கும் வாய்ஸ் ரெக்கார்டர் கொடுத்து ஐந்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எஸ்.பி.
குள்ளஞ்சாவடி, திருப்பாதிரிபுலியூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சத்திரம், நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களுக்குச் சென்றவர்கள் எஸ்.பி.யின் திட்டப்படி பொதுமக்கள் போலவே புகார் கொடுத்திருக்கிறார்கள். பொதுமக்களின் புகார்களுக்கு போலீஸார் என்ன மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதை அறியவே இந்த ஆபரேஷன்.
சில காவல் நிலையங்களில் புகாரை வாங்கி உரிய பதில் கொடுத்திருக்கிறார்கள். சில காவல் நிலையங்களில் திட்டி அனுப்பியிருக்கிறார்கள். அங்கே நடந்ததை அப்படியே வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்து எஸ்.பி.யிடம் கொடுத்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து எச்சரித்திருக்கிறார் எஸ்.பி.
அதன் விளைவுதான் தற்போது கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு யார் போனாலும், ’வாங்க சார். உங்களுக்கு என்ன குறை நிக்காதீங்க, உட்காருங்க’ என்று பவ்யமாக விசாரிக்கிறார்கள். கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக சி.எஸ்.ஆர். கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
எஸ்.பி. யை தொடர்பு கொண்டு மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை என அறிமுகத்தோடு பேசினோம்.
“ நான் இங்கே வந்த 14 நாட்களில் புதுச்சேரியிலிருந்து கடத்தப்படும் சாராயம், மற்றும் மது பாட்டில்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில்தான் அதிகமான விபத்துகளில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த விபத்துகளும் குறைந்துள்ளது” என்றவரிடம்,
“காவல் நிலையத்தில் லஞ்சம் முழுமையாகக் குறைந்துள்ளதே... எப்படி?’’ என்றோம்.
“மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை. முயற்சி செய்தால் முடியும். இப்போது என் மாவட்ட போலீஸ் தவறு செய்வதில்லை, மாவட்டத்தில் அனைத்து குற்றங்களும் குறைந்துள்ளதாக உங்களைப் போன்றவர்கள் சொல்வது மகிழ்ச்சியாகவிருக்கிறது.
இந்தப் பெருமை போலீஸாருக்கும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கும்தான். நான் காவல் துறை பணிக்கு வந்ததிலிருந்து எனது சம்பள பணத்தில்தான் சிறப்பான வாழ்க்கை நடத்திவருகிறேன்” என்றார்.
நாட்டில் நல்லவர்களும் அத்தி பூத்தாற்போல் போல் இருக்கத்தான் செய்கிறார்கள் சரவணன் போன்ற நல்ல அதிகாரிகளை ஊக்குவித்து பாதுகாப்பது மக்களுக்கு நல்லது.
#பகிர்வு_தகவல்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval