‘சுவடிகளில் சமயச்சார்பின்மை’ என்ற தலைப்பில் ‘பெருங்குத்தூசி’ (உள்ளத்தைத் தைக்கும் ஒரு பெயர்!) எழுதிய கட்டுரையைப் பதிவிடுகிறேன். ‘உலக வெற்றி முரசு’ (‘தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இளைஞர் அணியின் வார இதழ்) Feb’2006ல் வெளிவந்தது. மறைந்த ‘சொல்லரசு’ மாமா மூலமாக ஹமீதுஜாஃபர் நானாவுக்கு கிடைத்து, இன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. அண்ணாவியார் குடும்பத்தை விடாது தொடர்பு கொண்டு(அப்துல் -வாஹித் அண்ணாவியார்-அஸ்ரப் அலி அண்ணாவியார் -மற்றும் புலவர் பஷீர் -கவிஞ்ஞர் தாஹா இவர்களின் உதவியோடு) அன்னார் பற்றிய சில நூல்களையும் பெற்று, விபரமான கட்டுரை எழுதுபவர் ஆனால்
ஹமீதுஜாஃபர் நானார்! தனது புதிய வலைப்பதிவில் விரைவில் அதைப் பதிவார். ‘Ctrl+C’ நண்பர்கள் கவனம் கொள்வார்களாக!
நண்பர் ‘பெருங்குத்தூசி’யின் கட்டுரையில் இடம்பெற்ற ‘அமிர்தகவி’ செய்யது முகம்மது அண்ணாவியாரின் (1857 – 1934) புகைப்படம் ‘அமிர்தகவி’யுடையதல்ல என்பதுதான் சுவாரஸ்யம். ‘அமிர்தகவி’யின் கொள்ளுப்பேரனின் மகனது (‘லொள்ளுப்பேரன்’ என்று சுருக்கமாகச் சொல்லனுமோ?) புகைப்படம் அது! நாற்காலி மட்டும்தான் வித்யாசம்.இந்த Photoshop…! ‘அமிர்தகவி’யின் நாலாம் தலைமுறைப் புலவர் (இவரது பெயரும் செய்யது முகம்மது அண்ணாவியார்தான். Number Please..!) புகைப்படத்தை இத்துடன் இணைக்கிறேன். பாசம் வரவழைக்கும் இந்தப் பெரியவரின் கனிந்த முகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் முகம் மாதிரியே இல்லை! அப்புறம், ‘பெருங்குத்தூசி’ எந்த காரணத்தாலோ அப்துல் ரஹ்மான் பட்டினம்தான் பின்னர் அதிராம்பட்டினம் என்று மருவியது என்கிறார். மருவினாலே குழப்பம்தான். அதிவீரராமன் பட்டினம்தான் அதிராம்பட்டினமாயிற்று என்பதல்லவா வரலாறு? அதிரை சகோதரர்கள்தான் குழப்பம் தீர்க்கவேண்டும்.
‘அமிர்தகவி’ எழுதிய, ‘நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து’ பற்றிய பதிவு பிறகு. நூலின் தோரணவாயிலில், ‘சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. செந்தமிழுக்குச் சொந்தக்காரர்கள் அதிரை அண்ணாவியர்கள். பள்ளி வைத்துத் தமிழ் வளர்த்த பரம்பரை அது. அந்த நெடிய பரம்பரையினர் புலமைச் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றி கண்டவர்கள். புலமைச் செருக்கடந்தாரை அடக்கப் பேரிலக்கியமும் புனைந்தனர். பாமரரை மகிழ்விக்கச் சிறு பனுவல்களும் பாடினர். எதனை இயற்றியபோதும் தம் தனி முத்திரையை பதிக்க மட்டும் தவறவில்லை. இதனை இந்நூல் நெடுகிலும் பார்க்கக் காண்லாம்’ என்கிறார் அதிரைப் புலவர் அ. அஹ்மது பஷீர். ஆஹா! முனைவர் சே.மு.மு. முகமதலியின் ஆய்வு முன்னுரையும் சிறப்பு.
‘வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே – சித்ர
வர்ணக் கிளிட்டிட்ட தங்கமயம் ரெயில்
வண்டியில் ஏறடி தேனே!’ – அமிர்தகவி
***
சுவடிகளில் சமயச்சார்பின்மை‘பெருங்குத்தூசி’
இன்றிலிருந்து 250 ஆண்டுகளுக்குன் முன்பு ஓலைச்சுவடிகளில் சமயபேதம் பாராமல் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. இந்துக்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாபாரத நிகழ்ச்சியின் ஒரு காட்சியை தமிழ்ச் சுவைத்தேன் சொட்டச் சொட்ட பாக்கள் அமைத்து ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியத்தைப் படைத்துள்ளார், அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார். உ.வே.சாமிநாதய்யருக்கும் முற்பட்டவரான இவரால் 18-ஆம் நூற்றாண்டில் கடற்கரையோரத் தமிழர் மனங்களில் தமிழ் இலக்கிய மணம் வீசியுள்ளது.
தென்றல் வீசும்போதெல்லாம் நெற்குலை பாரம் தாங்காமல் தலைகவிழும் வயல்வெளி கொண்ட தஞ்சையின் அப்துல் ரஹ்மான் பட்டினம் என்று வழங்கி இன்று பெயர் மருவி அதிராம்பட்டினம் என்றழைக்கப்படும் ஊரில் பிறந்தவர் இப்பெரும் புலவர். 1750-ஆம் ஆண்டு வாக்கில் இவர் மேலைத்தெருவில் வாழ்ந்துள்ள வரலாற்றால் – கம்பன் வாழ்ந்த தேரெழுந்தூர் புகழ்பெற்றதுபோல – இந்த மதுரகவியால் இன்று அதிராம்பட்டினமே பெருமை பெற்றுவிட்டது.
குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடிய பின், பாண்டவர்களில் மூத்தவர் தருமர், நாட்டில் அமைதி வேண்டி யாகம் செய்கிறார். இந்த கருப்பொருளை மையமாக வைத்தே ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியம் அமிர்தகவியால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாகக் கிடைக்காத காலம். அமிர்தகவி அண்ணாவியார் ஓலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார்.
செய்யது முகம்மது அண்ணாவி அவர்கள், குமாரகாவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமண்யர் பிரசன்ன பதிகம், நூர் நாமா, அலிநாமா, அய்யம்பேட்டை பாட்சா ராவுத்தர் பவனி, யானை விருத்தம், வாள் விருத்தம், பரி விருத்தம், நாகூர்ப் புகை ரத ஒய்யாரச் சிந்து, திருமண பவனி, மகாபாரத அம்மானை மற்றும் சாந்தாதி அசுவமகம் என்ற காப்பிய இலக்கியமும் படைத்து தமிழுக்கு அணி செய்துள்ளார்.
பெரும்புலவர் செய்யது முகம்மது அவர்களின் பெயருடன் அண்ணாவி என்ற சிறப்புப்பெயர் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் ‘லெக்சிகன்’ கூறும் விளக்கப்படி இவர் அண்ணாவியாக அதாவது உபாத்தியாயராகவும், தலைவராகவும், மெய்விளக்கத்துறை தலைவராகவும் தமிழ்க் காப்பாளராகவும் விளங்கியுள்ளார்.
கவிமனம் சுதந்திரமானது, எதற்கும் கட்டுப்படாதது என்பது இவரின் இலக்கியங்களின் தலைப்பைப் பார்த்தாலே நமக்கு விளங்குவதாகும்.
உ.வே.சா அவர்கள் பண்டைய சுவடி நூல்களைத் தேடிப்பிடித்து அச்சேற்றியவர். 1798-களில் இப்பணி இவரால் தொடங்கியது. ஆனால் அண்ணாவியாரோ, சுவடிகளிலேயே தம் இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளார் என்பதான சேதி உ.வே.சாவுக்கும் முந்தையவர் இவர் என்பது விளங்குகிறது.
இவரின் சுவடி நூல்களின் அச்சுப்பதிப்பு பதிக்கும் பணியை சிரமேற்கொண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக சுவடி இயல் துறை வெளியிட்டுள்ளது. முதன்முதலாக ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற நூலை வெளியிட்டுள்ள இப்பல்கலைக் கழகத்திடம் இப்புலவரின் பெயரர் செய்யது முகம்மது அண்ணாவியார் தம் பாட்டனாரின் அனைத்துச் சுவடிகளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
255 ஆண்டுகளுக்கு முன்பே இம்மண்ணில் சமயங்களைக் கடந்த காப்பிய இலக்கியங்களைப் படைத்து, தமிழ் மண்ணில் சமயங்களுக்கு அப்பாற்பட்டு வெறும் தமிழ்ச்சுவை ஒன்றிற்காக புலவர் உலகம் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அவர்கள் காலம் காலமாகச் சமயச் சார்பின்மையைத் தங்கள் மேலான கொள்கையாய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார் அவர்கள்.
18-ஆம் நூற்றாண்டு பெரும் புலவர் படைத்த பலவும் சுவடிகளிலிருந்து இப்போதுதான் அச்சேர அரங்கம் நோக்கி வருகின்றன. இவரின் ஒரு சுவடியே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக ஆய்வாளர்களை நூலின் கட்டமைப்பு ஆச்சரியப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அஞ்சல்துறை 255 ஆண்டுகளுக்கு முன்னமே தன் இலக்கியப் பணி வாயிலாக சமய நல்லிணக்கம் பேணிய பெரும்புலவர் அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியாரைக் கண்ணியப்படுத்தும் வகையில் நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்.
*
நன்றி : ‘உலக வெற்றி முரசு’, பெருங்குத்தூசி, ஹமீது ஜாஃபர் நானா மற்றும் அண்ணாவியார் குடும்பத்தினர்
*
தொடர்புடைய சில விபரங்கள்:
‘நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை ‘சாந்தாதி அசுவமகம்’ என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது’ –
‘ஜெயம் என்ற பாரதமும் நல்லாப்பிள்ளையும்’ – பொ. வேல்சாமி / காலச்சுவடு
***
அண்ணாவியார் பற்றிய மேலதிக விபரங்களுக்கு சகோதர எழுத்தாளர்
ஹமீது ஜாஃபரின் தளத்திற்கு செல்க.
மீள் பதிவு