Monday, September 2, 2013

அலர்ஜியைத் தடுக்கும் மீன்



மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14 ,

ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

 குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. 

அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை
குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

 உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.

 மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.

 மீனை  ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  தகவல்: N .K .M .புரோஜ்கான்  அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval