Thursday, July 12, 2018

*நேதாஜியை காப்பாற்ற 3 முறை குண்டடிபட்ட “கலோனல்” நிஜாமுதீன்

நேதாஜியை காப்பாற்ற மூன்று குண்டுகளை தாங்கிய கலோனல் நிஜாமுதீன் என்ற போராளியின் வரலாறு*

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆகிவிட்டது. சுதந்திரம் வாங்குவதற்காக போராடிய பல போராளிகள் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டனர். பெரிய தலைவராக இல்லை என்றாலும், சிலர் செய்த தியாகங்கள் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளது என்றால் மிகையாகாது. அப்படி வரலாற்றில் மறந்து போன நபர் தான் கலோனல் நிஜாமுதீன்.

நிஜாமுதீன் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பர்மா காடுகளில் நடந்த திடீர் தாக்குதலில் நேதாஜியை நோக்கி வந்த 3 குண்டுகளை தான் தாங்கிக் கொண்டு நேதாஜியை காப்பாற்றியவர். இவரின் பெயருக்கு முன்னாள் இருக்கும் கலோனல்  என்ற பட்டம் நேதாஜி அவர்களால் வழங்கப்பட்டது.

*ஆரம்ப கால வாழ்க்கை:*

நிஜாமுதீனின் உண்மையான பெயர் சஃபியுதீன். உத்திரபிரதேச மாநிலம் டக்கன் (தற்போது அசம்கர்க்) பகுதியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை இமாம் அலி ரங்கூனில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். நிஜாமுதீன் தனது தாயுடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.

தனது இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி கப்பல் மூலம் பயணம் செய்து பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார் நிஜாமுதீன். அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

பிரச்சனை என வரும் போது, இந்திய வீரனா அல்லது கழுதையா? இதில் யாரை காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் வந்தால், நீங்கள் கழுதையையே காப்பாற்றுங்கள். உங்கள் உணவுகள் மற்றும் உடமைகளை சுமந்து செல்ல கழுதையே உதவும். இந்திய வீரன் செத்தால் சாகட்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி.

இதனால் கோபமடைந்த நிஜாமுதீன், அந்த ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து சிங்கப்பூர் தப்பிச் செல்கிறார். அப்போது தான் சஃபியுதீன் என்ற தனது பெயரை நிஜாமுதீன் ஆக மாற்றிக் கொள்கிறார். பின்பு சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முன்னிலையில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார்.

1943 ஆம் ஆண்டு பெர்லினிலிருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம், சிங்கப்பூர் வந்திருந்தார் நேதாஜி. அங்கு இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைப்பதில் ஈடுபட்டார். சிங்கப்பூர் முகாமில் தான் நேதாஜியின் நம்பிக்கையை பெற்றுள்ளார் நிஜாமுதீன். மலேசிய மன்னர் நேதாஜிக்கு அன்பளிப்பாக வழங்கிய 12 சிலிண்டர் மாடல் காரின் ஓட்டுனராக பணியைத் தொடங்கினார் நிஜாமுதீன்.

1943-44 யில் மியான்மரில் (அன்றைய பர்மா) பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக நடந்த சண்டையில் நேதாஜியுடன் சேர்ந்து சண்டையில் ஈடுபட்டுள்ளார் நிஜாமுதீன். இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில்,

*நாங்கள் காட்டிற்குள் சென்று கொண்டிருந்த போது, திடீரென மூன்று குண்டுகள் நேதாஜியை நோக்கி வருவதை பார்த்த நான், சிறிது நேரம் கூட தாமதிக்காமல் அவரின் முன்பு பாய்ந்தேன். 3 குண்டுகளும் என் மீது பாய்ந்ததில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தேன். நான் மயக்கத்திலிருந்து நினைவுக்கு திரும்பிய போது, என் முன்னால் நேதாஜி நின்று கொண்டிருந்தார். கேப்டன் லட்சுமி சேகல் தான் குண்டுகளை வெளியே எடுத்தார். இது 1943 ஆம் ஆண்டு நடந்தது என்றார்.*


இவரின் தியாகத்தை பார்த்த நேதாஜி, நிஜாமுதீனுக்கு கலோனல் பட்டத்தை வழங்கினார்.

அதன் பின்பு 4 வருடங்கள் நேதாஜிக்கு ஓட்டுனராகவும், பாதுகாப்பாளராகவும், அவர் செல்லும் இடமெல்லாம் பக்கபலமாக இருந்துள்ளார் நிஜாமுதீன். ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு நேதாஜியுடன் பயணம் செய்துள்ளார் கலோனல் நிஜாமுதீன்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜப்பான் சரணடைந்த பின்பு, இந்திய தேசிய ராணுவத்தை கலைத்தார் நேதாஜி. அதன் பின்பு, ரங்கூனில் இருந்த ஒரு வங்கியில் ஓட்டுனராக பணி புரிந்துள்ளார் நிஜாமுதீன். அங்கு அஜ்புன் நிஷா என்ற பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள் ரன்கூனிலேயே வளர்ந்தனர்.

1969 ஆம் ஆண்டு, ரங்கூனிலிருந்து இந்திய வந்த நிஜாமுதீன், தனது சொந்த ஊரில் வசிக்க துவங்கியுள்ளார். அவருடைய வீட்டின் பெயர் “ஹிந்த் பவன்” என்று சூட்டியுள்ளார். தனது வீட்டின் மேற்கூரையில் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் வண்ணம் பூசியுள்ளார் நிஜாமுதீன்.

தேச விடுதலைக்காக உழைத்த இந்த போராளியின் கடைசி நேர வாழ்க்கை வறுமையிலேயே கழிந்தது. மத்திய அரசு இவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியில், பிப்ரவரி 6, 2017 ஆம் ஆண்டு இருந்து போனார் நிஜாமுதீன். இந்திய சுதந்திர வீரராக இருந்த இவர், எப்படி வெளிச்சத்திற்கு வந்தார் என்பதை கேட்டால் நம் அனைவருக்கும் மனம் கணக்கும். ஆம் இவர் இறந்த பின்பு, உலகிலேயே அதிக நாள் வாழ்ந்த நபர் என்ற அடிப்படையில் தான் இவர் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். அவர் இறந்த போது அவருக்கு வயது 117. இவரின் மனைவிக்கு வயது 107.

இவரை போலவே பல சுதந்திர போராட்ட போராளிகள் இன்னமும் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றனர். நேதாஜியை தெரிந்த இளைஞர்களுக்கு, அவரை காப்பாற்றிய நிஜாமுதீனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரை மூலம், ஒரு மகத்தான போராளியை இளைய சமூகத்திற்கு தெரியப்படுத்துவதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.

தகவல் K M S சகாபுதீன் 
malaysia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval