Wednesday, February 13, 2019

பெரியார்.

Image may contain: 1 person, sitting
1964-ஆண்டு கரூர் வந்த பெரியார் அவர்களை காண ஒரு அய்யர் பூணூலை மறைக்க ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்தார்.
இதைக் கண்ட தொண்டர்கள் ஆவேசப்பட்டு, 'உனகென்னையா இங்கே வேலை' என்று கேட்க..
'நான் ராமசாமி நாயக்கரை பார்க்கணும். அது தான் வேலை.' என்றவுடன்,
'அதெல்லாம் பார்க்க முடியாது நீங்கள் திரும்பிப் போங்கள்' என்று சொன்ன சொல் அய்யாவின் காதில் விழுந்தது.
வெகுண்டு வெளியே வந்த அய்யா, நடந்ததைப் புரிந்து கொண்டு, தன் தோழர்களை அழைத்து..
"ஏனப்பா நீங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தானா? ஒருவர் நம்மைத் தேடி வந்தால் அவரை அழைத்து உபசரிக்க வேண்டாமா? இப்படி நீங்கள் செய்வதால் நம் கொள்கைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா? தனிப்பட்ட எந்த ஒரு பார்ப்பனரும் நமக்கு எதிரி கிடையாது" எனக் கண்டிப்பு காட்டி விட்டு..
அய்யா அந்த அய்யரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்து விவரம் கேட்டார்.
வந்தவர் "நாயக்கர்வாள் எனக்கு வயது 65. மனைவி இறந்து விட்டாள். பிள்ளைகள் கிடையாது. எங்கள் வீடு அகலம் 64 அடி. அதில் என் அண்ணன் பங்கு 32 அடி..
அதை அவன் உங்கள் கட்சிக்காரருக்கு விற்று விட்டான். வாங்கிய உங்கள் தொண்டர் கொல்லைப்பக்கம் வேலியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, இப்போது எனக்கு வெறும் 2 அடி மட்டுமே உள்ளது.
வயதான இந்தக் காலத்தில் அவசரமாக என்னால் கழிவறைக்குக் கூட போக முடியவில்லை.
நான் ஓய்வுபெற்ற ஆசிரியன். எனக்கு பென்ஷன் மாதம் 6 ரூபாய் தான் கிடைக்கிறது.
உங்களிடம் சொன்னால் நல்லது செய்வீர்கள் என்று என் உறவினர் சொன்னார்.அது தான் வந்தேன்" என்றார்..
இதைக்கேட்டு வேதனைப்பட்ட அய்யா, தொண்டர்களிடம் 'யாரப்பா அந்த அயோக்கியன்' என்று கேட்டார்..
'அய்யா இன்று இந்த கூட்டமே அவர் எற்பாடு தான்.'
என்றவுடன்.. கூட்டி வாருங்கள் அவரை என்றார்...
அந்த தோழர் வந்து நின்றவுடன் அய்யா அவரிடம்...
"நீங்க நாளைக்கே வேலியை அவிழ்த்துக் கட்டி, அவருக்கு 32 அடி கொடுக்கணும். அதிலுள்ள மரம் எதையும் வெட்டக் கூடாது. அவருக்கு ஒரு பைசா கூட செலவு வைக்கக் கூடாது.
எந்த ஒரு சாக்குபோக்கு சொல்லியும் இந்த காரியத்தைத் தள்ளிப் போடக் கூடாது.போ.."
-என்றார்..
10 நாட்கள் கழித்து அந்த அய்யர் சென்னை சென்று அய்யா அவர்களுக்கு கூடை நிறையப் பழங்கள் வாங்கிக் கொண்டு, நேரில் பார்த்து நன்றி கூறினார்..
பழங்களை வாங்க மறுத்த பெரியார்,
"நீங்கள் செய்தது தவறு. தப்பு செஞ்சவன் என் கட்சிக்காரன். அதற்கு ஏன் நீங்கள் எனக்குப் பழம் தரணும்? இது போன்ற செயல்களால் தான் லஞ்சம் ஆரம்பமாகிறது.
நீங்கள் நன்றி சொல்ல ஒரு அஞ்சலட்டை போதுமே? உங்கள் 6 ரூபாய் வருமானத்தில் ரயில் வண்டிக்கு 3 ரூபாய், இந்தப் பழங்கள் 20 ரூபாய் இருக்கும் இப்படிச் செய்யலாமா?"
-என்று சொல்லி அவருக்கு 30 ரூபாய் கொடுத்து, வாசல் வரை வந்து அனுப்பியவர்
அவர் தான் பெரியார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval