கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதேபோல் இவரது சகோதரி ஒருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே அவரது தந்தையின் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றுள்ளார் ஆஷிக். தந்தை இறந்த பின்னர் தனக்கு இருக்கும் கடன்களை அடைப்பதற்காகக் கடந்த வருடம் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்குச் சம்பாதித்த பணத்தை வைத்து அவரது குடும்பம் வங்கிக் கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்ததுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த நிம்மதி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் பணிக்குச் சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் ஆஷிக்.
இதனால் அவரது குடும்பம் மீண்டும் வறுமையில் வாடியது. ஒருபுறம் ஆஷிக் இல்லாமல் அவரது குடும்பம் தவித்து வர மறுபுறம் அவர் வங்கியில் வாங்கியிருந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து அதிகமானது. 2009ல் அவர் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 17 லட்சத்தைத் தொட வங்கி நிர்வாகம் அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆஷிக்கின் மனைவி பல்வேறு இடங்களிலும் முயற்சி செய்து பார்த்தும் இவ்வளவு பணத்தை தருவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். வங்கி நிர்வாகம் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் கடைசி கெடு விதித்தது. இதைச் சொன்ன மறுநாளே வங்கியில் இருந்து ஆஷிக்கின் வீட்டுக்கு அதிகாரிகள் வந்திருந்தனர். பயத்துடன் இப்போதே வீட்டை காலி செய்யப்போகிறார்களோ என எண்ணிய ஆஷிக்கின் மனைவி மற்றும் தாய்க்கு அங்கு நடந்தவை அனைத்தும் நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது.
வீட்டை உடனே காலி செய்ய சொல்லப்போகிறார்களோ என எண்ணிச் சென்ற அவர்களிடத்தில் அவர்கள் வீடு மற்றும் நிலத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் ஒப்படைத்தனர். உங்கள் கடன் திரும்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்ற இன்பச் செய்தியையும் சொல்லினர். அங்கு நடப்பது என்னவென்று தெரியாமல் முழித்த ஆஷிக்கின் மனைவி யார் திருப்பி செலுத்தியது என்ற விசாரணையில் இறங்கினார். அப்போது தான் அவருக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது. ஆஷிக் இறந்தது, அதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடிய தகவல் அனைத்தும் உள்ளூர் அமைப்பு ஒன்றின் மூலம் கேரள பில்லியனர், எம்ஏ யூசுப் அலிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக இதுகுறித்து விசாரித்த அவர், தனது நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் மூலமாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டு ஆஷிக் குடும்பத்தின் மொத்த கடனையும் 24 மணி நேரத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளார். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆஷிக் குடும்பத்தினர், ``ரமலான் மாதத்தில் தெய்வம் போல் எங்களைக் காப்பாற்றினார். அவருக்கு எப்படி நன்றிகள் சொல்வது என்றே தெரியவில்லை. அவருக்காக எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்" என நெகிழ்ச்சியில் திகைத்து போயிருந்தனர்.
எம்ஏ யூசுப் அலி துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லூலூ குரூப்பின் சேர்மன். இவர் இப்படி உதவுவது முதல் முறையல்ல. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.18 கோடி அளித்து உதவியுள்ளார். மேலும் அவரது சொந்த ஊரான திருச்சூர் அருகே நாட்டிகாவுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களைச் செய்துள்ளார் எனப் புகழ்கின்றனர் கேரள மக்கள்.
நன்றி:விகடன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval