மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும் வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில் மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.
மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்.
அவர் சிறந்த வழக்கறிஞராக இருந்து ஆற்றிய பணிகளும் பிரமிக்கத்தக்கவை.
பினாங்கில் அவரது CAP அலுவலகத்தில் அவரோடு பல முறை சந்தித்து; உரையாடி; பல அனுபவங்களை பெற்றுள்ளேன்.
அவர், கப்பல் வணிகத்தில் கொடி கட்டிப் பறந்த குடும்பத்தில் பிறந்தவர் . அரசியலில் ஈடுபட்டு, பின்னாளில் மனித உரிமை களங்களில் இயங்கினார்.
அவரது அலுவலகத்தில் ராவ், மற்றும் உமா போன்ற முழு நேர ஊழியர்கள் அவரது பணிகளை செவ்வனே செய்து வந்தனர். அவரது அலுவலகத்திற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் ,இயற்கை விவசாய பயற்சியை பலருக்கும் வழங்கினார்.
இங்கு தமிழகத்திலிருந்து டாக்டர். ராமதாஸ், ஐயா. நம்மாழ்வர் போன்றோர் வருகை தந்துள்ளதை அவர் என்னிடம் கூறினார்.
மலேஷியாவின் 4 பிரதமர்களின் மரியாதைக்குரியவராக அவர் வாழ்ந்தார் என்பது அவரது ஆளுமையை பறை சாற்றும்.
மலேஷிய ஊடகங்கள் அவரது மரணத்திற்கு செலுத்தியுள்ள மரியாதை அதை நிருபிக்கிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் பினாங்கில் தஞ்சோங் பூங்கா என்ற இடத்தில் பன்னாட்டு மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முகாமை அவர் நடத்தினார். அதில் நானும் பங்கு கொண்டேன்.
அவரை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஐயா. நல்லக்கண்ணு, ஐயா. நம்மாழ்வார், நீதியரசர் சந்துரு ஆகியோரின் கலவை எனலாம்.
சமீபத்தில், மலேஷியா சென்றப் போது, அவரை சந்திக்க வேண்டும் என உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.
துபையில், இரவு நிகழ்ச்சியை முடித்து விட்டு, விடுதிக்கு திரும்பிய போது, அவரது மரணச் செய்தியறிந்து துவண்டு விட்டேன். அவரது இறுதி தொழுகையில் பங்கெடுக்க முடியவில்லையே என மனம் வேதனையடைகிறது.
அவரை அறிந்தவர்களுக்கும், சந்தித்தவர்களுக்கும் தான் அவரது இழப்பின் வலி புரியும்.
ஒரு உயர்ந்த மனித உரிமை போராளியை மலேஷியா இழந்துள்ளது. நல்ல பண்பாளரை தமிழ் சமூகம் இழந்துள்ளது. சிறந்த ஆளுமையை இந்திய சமூகம் இழந்துள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
புனித ரமலானில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சமூக சேவைக்காக; மக்கள் உரிமைக்காக பணியாற்றிய அவருக்கு, மறு உலகில் சுவர்க்கத்துடன் கூடிய சுகமான வாழ்வு கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இவண்,
உள்ளார்ந்த சோகத்துடன்...
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
18.05.19
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval