Wednesday, May 2, 2018

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட கசாலி பகுதியில் பல ஓட்டல்கள் சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 17-ம் தேதி சுமார் 13 ஓட்டல்களின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட்டது. 17-ம்தேதி உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு, கசாலி நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது. நிலச்சரிவு ஏதும் ஏற்பட்டால் கட்டிடங்கள், வீடுகள் சரிந்து பெரும்விபத்து ஏற்படும். 2 மாடி கட்டிடங்கள் கட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியில் 6 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. பணம் ஈட்டுவதற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்தையும் இடித்து தள்ள உத்தரவிட்டது.
 
இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் நகர்ப்புற உதவி திட்ட பெண் அதிகாரியான சைல்பாலா சர்மா தலைமையில் ஒரு குழுவினர் நேற்று இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு ஓட்டலின் உரிமையாளர் விஜய் தாகூர், சைல்பாலாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை தொடர்ந்து விஜய் தாகூர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 
தப்பியோடிய அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே சட்ட விரோத கட்டிடங்களை இடிக்கச்சென்ற பெண் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாகின. 

இதை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததுடன், சம்பவத்தின் போது தகுந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளாத மாநில அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரி ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகவும் கவலைப்படவேண்டிய விஷயமாகும். இதுவரை கொலை செய்தவரை போலீஸ் கைது செய்யவில்லை. ஆக்கிமிப்பை அகற்ற பெண் அதிகாரிக்கும் போதுமான பாதுகாப்பும் அளிக்கவில்லை. இந்த வழக்கை நாங்கள் தாமா விசாரணைக்கு எடுத்திருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாங்கள் உத்தரவுகளை பிறப்பிக்காமல் போகலாம் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval