Sunday, January 31, 2021

காலத்தால் செய்த உதவி

 கடை வீதியின் ஒரு ஓரமாக நின்று பலூன் விற்றுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.


பலூன்களை பார்த்து விட்டு அதை வாங்குவதற்காக அருகே வரும் குழந்தைகள், ஏன் பெரியவர்களும் கூட , அருகில் வந்து அவள் முகத்தைப் பார்த்தவுடன் சட்டென அவளை விட்டு விலகிப் போனார்கள்.

புடவைத் தலைப்பால் தன் முகத்தின் ஒரு பக்கத்தை மறைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் அவள். ஏனெனில் அவள் முகம் ஆசிட் வீச்சின் அமிலத் தழும்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 

அது டெல்லி லஜ்பத் நகர் பஜார்.

தற்செயலாகத்தான் அந்தப் பெண்ணை கவனித்தார் ஆகாஷ். அருகே சென்று விசாரித்தார் :"என்னம்மா நடந்தது ? எதனால் உனக்கு இப்படி ஆயிற்று ?"

சற்றே தயங்கினாள் அவள்.

"உனக்கு ஏதாவது உதவி செய்யலாம் என நினைக்கிறேன். விருப்பமிருந்தால் சொல்."

அந்தப் பெண் நிமிர்ந்து ஆகாஷின் முகம் பார்த்தாள்.

சில வருடங்களுக்கு முன்னர்தான் அந்த கோரச் சம்பவம் நடந்ததாம்.

அவள் பக்கத்து வீட்டு பையன்தான் அவன். அந்தப் பையனின் வீட்டுக்காரர்களுக்கும் , இந்தப் பெண்ணின் வீட்டுக்கும் கொஞ்ச நாட்களாகவே வாய்த் தகராறு .
அது முற்றி இப்படி ஆஸிட் வீச்சில் வந்து முடியும் என்று எவருமே நினைக்கவில்லை.

மறைத்து வைத்திருந்த ஆஸிட்டை எடுத்து 'சட்'டென்று அந்தப் பெண் முகத்தில் ஊற்றி விட்டு ஓடி விட்டான் அந்தப் பையன். பதறித் துடித்து பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

சிலநாள் சிகிச்சை . உயிரை காப்பாற்றி விட்டார்கள் . ஆனால் அவள் முகத்தின் அழகை காப்பாற்ற முடியவில்லை. முகம் முழுவதும் அமிலத் தழும்புகள் .

வீட்டுக்குள் நுழைந்தாள் .
அவளது சின்னஞ்சிறு குழந்தை ஓடிவந்து அவளது முகத்தை உற்றுப் பார்த்து விட்டு ஒரு நொடி திகைத்து நின்றது .

அவள் உள்ளுக்குள் திகைத்தாள் :“குழந்தை தன் முகத்தைப் பார்த்து பயந்து போய் தன்னை விட்டு விட்டு விலகிப் போய் விடுமோ?” - அவள் சேலைத்தலைப்பால் தன் முகம் மறைத்துக் கொண்டாள் .

ஆனால் குழந்தை விடவில்லை.
தன் அன்னை அருகில் வந்து முகத்தை மறைக்க விடாமல் புடவையை பிடித்து இழுத்தது. பின் அவளை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது. அவளும் கண்ணீரோடு தன் குழந்தையை கட்டித் தழுவிக் கொண்டாள்

அமிலத் தழும்புகள் அவள் முகத்தை மாற்றி இருந்தாலும், தன் அம்மாதான் இவள் என அந்தக் குழந்தை அடையாளம் கண்டு கொண்டது ; அன்போடு ஏற்றுக் கொண்டது.

ஆனால் அவள் கணவன் அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவள் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி நின்று வெறுப்போடு சொன்னான் :
“நான் வேறு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். "

அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை .
குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

"என்ன செய்யப் போகிறேன் ? எப்படி இந்தக் குழந்தையை காப்பாற்றப் போகிறேன் ?"
எந்த இலக்கும் இன்றி கையில் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு கடை வீதியில் சுற்றி சுற்றி வந்தாள்.

இடுப்பில் இருந்த அவள் குழந்தை ஏதோ ஒரு பக்கம் கை நீட்டியது.திரும்பிப் பார்த்தாள்.வண்ண வண்ண பலூன்கள் நிறைய தொங்கிக் கொண்டிருந்தன.

ஒரு முடிவெடுத்தாள். கலர் கலராய் நிறைய பலூன்களை வாங்கிக் கொண்டாள் .

டெல்லியில் லஜ்பத் நகர் .
நிறைய மக்கள் கூட்டம் வரும் இடம். அங்கே போய் பலூன்களை கையில் வைத்துக் கொண்டு நின்றாள்.

ஹிந்தியிலும் , அரைகுறை ஆங்கிலத்திலும் பேசி நிறைய பலூன்களை விற்க ஆரம்பித்தாள்.
அரைகுறை ஆங்கிலத்தில் அந்தப் பெண் காட்டிய அசாத்திய திறமை ஆகாஷை கவர்ந்தது : “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?”

“ஓரளவு.”

"அப்படியானால் வேறு ஏதாவது அலுவலக வேலைக்கு போகலாமே ?"

"அழகாக இருக்கும் பெண்களுக்குத்தான் அலுவலகத்தில் வேலை கொடுப்பார்கள். இந்த முகத்தோடு இருக்கும் எனக்கு எப்படி ..?"

“நான் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க இருக்கிறேன். அதில் வேலைக்கு சேர்கிறீர்களா?”

அது 2015 ஆம் ஆண்டு.

அதைப் பற்றி சொல்கிறார் ஆகாஷ் : “ஷாப்பிங் வந்த இடத்தில் தற்செயலாக இந்த பெண்ணைப் பார்த்தேன் . அதுவரை நான் தனியாகத்தான் அலுவலகம் எதுவும் இல்லாமலேயே டிக்கெட் புக் செய்து கஸ்டமர்களுக்கு கொடுத்து பிசினஸ் செய்து கொண்டிருந்தேன் .

இந்த ஆஸிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்தவுடன் , இவளுக்கு உதவ வேண்டும் என்று ஏதோ ஒரு சக்தி எனக்குள் இருந்து உந்தித் தள்ளியது. அந்தப் பெண்ணிடம் வேலைக்கு வருகிறாயா என்று கேட்டு விட்டேனே தவிர , அப்போது எனக்கு அலுவலகம் எதுவும் கிடையாது. வீட்டுக்கு போனவுடன் இந்தப் பெண்ணை சந்தித்தது பற்றி மனைவியிடம் சொன்னேன் .”

ஆகாஷின் மனைவி உடனே சொன்னார்: “அடடா, கண்டிப்பாக அந்தப் பெண்ணுக்கு நாம் உதவி செய்தே ஆக வேண்டும்.”

“ஆமாம். ஆனால் அலுவலகம் ஆரம்பிக்க தேவையான பணம்தான் ...?”

“கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக நாம் டிராவல்ஸ் ஏஜென்சி ஆரம்பித்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யத்தான் போகிறோம்.”

“எப்படி ?”

“ஒரு நிமிஷம் பொறுங்கள், இதோ வந்து விடுகிறேன்.”

எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தார் ஆகாஷ்.

“இந்தாருங்கள் !”

நிமிர்ந்து பார்த்த ஆகாஷ் திகைத்துப் போனார். கழுத்தில் கிடந்த ஒற்றைச் சங்கிலியை தவிர கையில் கழுத்தில் கிடந்த அத்தனை தங்க நகைகள், பீரோவில் வைத்திருந்த நகைகள். எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்துக் கொண்டு வந்து கணவன் கைகளில் தந்து விட்டார் ஆகாஷின் மனைவி .

ஆகாஷ் கண் கலங்கிப் போனார். ஆனால் அவரது மனைவி சொன்னார் :
“ ஏன் யோசிக்கிறீர்கள் ? நீங்கள் பார்த்து விட்டு வந்த அந்த பெண் நம் சகோதரியாக இருந்தால் நாம் உதவி செய்ய மாட்டோமா ?”

அதற்குப் பின் ஆகாஷ் தயங்கவில்லை. மனைவி சொன்ன வார்த்தைகளில் இருந்த மந்திர சக்தி, உடனடியாக அவரை செயல்பட வைத்தது .

நகைகளை விற்ற பணத்தில் நல்லபடியாக ஆரம்பிக்கப்பட்ட ஆகாஷின் டிராவல்ஸ் ஏஜென்சியில் இப்போது ஆறு பெண்கள் வேலை செய்கிறார்கள்.

அன்றைக்கு கடைவீதியில் பலூன் விற்ற அந்த ஆஸிட் பெண் , இன்று பல நூறு டிராவல்ஸ் ஆர்டர்களை அந்தக் கம்பெனிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறாள் .

மனைவி கொடுத்த உற்சாகத்தால் , இன்னும் இது போல ஆஸிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கும் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார் ஆகாஷ்.

அத்தனை பெண்களும் ஆகாஷை பாராட்ட, ஆகாஷ் இத்தனைக்கும் துணை நின்ற தன் மனைவியை பாராட்டுகிறார்.

அமிலத்தால் அழகை அழிக்கலாம்.
அக்கினியால் உடம்பை அழிக்கலாம்.
அணுகுண்டால் அகில உலகத்தையே அழிக்கலாம்.

ஆனால் எதனாலும் அழியாதது, என்றென்றும் அழிக்க முடியாதது மனித நேயமும், மகத்தான அன்பும் மட்டுமே !

வாழ்க வாழ்க ஆகாஷ் தம்பதியினர் !

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval