Thursday, November 21, 2013

30 கோடி மோசடி செய்த பாத்திமா நாச்சியார்!

கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் அருகில் இந்திரா நகர் புதுத் தெருவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர் பாத்திமா நாச்சியார். இவர் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிமுன் அன்சாரி.
பாத்திமாவிடம் 10 பவுன் தங்க நகையைக் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் தருவாராம். இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளைப் பாத்திமா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நகைகளைப் பெற்ற பாத்திமா நாச்சியார், அவற்றைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாக சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் சிலர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சென்ற பாத்திமா, டிஜிபியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாத்திமா நாச்சியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ஒரு மணி நேரம் கழித்து வந்தவர், “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:
“2010-லிருந்து 2012 ஜனவரி வரை நகை சுழற்சி (?) செய்து வந்தேன். எனக்கு 23 பேர் முகவர்களாகச் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ளவர்களிடம்தான் நாங்கள் நகைகளை வாங்கியுள்ளோம். அவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து 10 பவுன் நகை வாங்கித் தந்தால், 10 நாளில் ரூ.15 ஆயிரம் தருவேன். ஒரு மாதத்தில் நகையை திரும்பத் தந்து விடுவேன். எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருந்தோம். நகை சுழற்சி நடக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.
நகைகளை மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்தில் அடகு வைத்துதான் பணத்தை தந்து கொண்டிருந்தேன். முதலில் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் நகை வைக்கலாம் என்றார்கள். ஒருகட்டத்தில், அவர்கள், தொகை ரூ.8 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது, இனிமேல் நகை வைக்க முடியாது என்றதால் பண சுழற்சி நின்றுவிட்டது. அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை ஐசிஐசிஐ வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்கர் என்பவர் உதவ முன்வந்தார். ஒருவரின் பெயரில் ரூ.4.50 லட்சம் வரை நகைக் கடன் பெறலாம் என்பதால், அவரே சுமார் 150 பேரின் பெயரில் நகைக் கடன் பெற்றுத் தந்தார். அவரே பெயர் வைத்து, ஆவணங்களையும் தயார் செய்து கொண்டார். இதற்காக என்னிடம் ரூ.4.50 கோடி வரை கமிஷனாகப் பறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்கள் 10 மாதம் வரை நகையை வைத்துக்கொள்ளுங்கள், முதலிலேயே ரூ. 1 லட்சமாகத் தந்துவிடுங்கள் என்றனர். அப்படி என்றால் நகையை திரும்பத் தரும்போது பணத்தையும் திரும்பத் தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனைப்படி எல்லோருக்கும் பணம் தந்தேன்.
முகவர்களால்தான் பிரச்சினை
இதற்காக நான் யாரிடமும் எழுதிக் கொடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்துக்கு முகவர்கள் எழுதித் தந்துள்ளனர். அந்தப் பணத்தை அவர்களை வேறு வழிகளில் முதலீடு செய்து, வீடும் சொத்தும் சேர்க்கத் தொடங்கியதால்தான் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது.
இந்நிலையில்தான், மயிலாடுதுறையிலிருந்து நான் அடித்துத் துரத்தப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள எனது கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். மயிலாடுதுறையில் உள்ள வீட்டை எனது முகவராக செயல்பட்ட தன்ஷிலா வடகரை என்பவருக்காக பாமகவைச் சேர்ந்த வி.ஜெ. மணி, ம.க. ஸ்டாலின் ஆகியோர் எங்களை மிரட்டி வீட்டின் பத்திரத்தை வாங்கிச் சென்று விட்டனர்.
என் மீது நாகை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு உதவ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இம்தியாஸ் என்பவர் முன்வந்தார். என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யவுள்ளதாகவும், அதனால் முன்ஜாமீன் பெற வேண்டும் என்று
அவர் கூறியதோடு, இந்தப் பிரச்சினைகளை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வரை பறித்துக் கொண்டார். முன் ஜாமீன் மட்டும்தான் பெற்றுத் தந்தார். முன்ஜாமீன் பெற ரூ.22 ஆயிரம்தான் செலவாகும் என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னை மிரட்டி பணம்பறித்துக்கொண்ட அவர், எனது காரையும் தர மறுக்கிறார்.கணவரை கடத்தினர்
கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் வந்து எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து என் கணவரை கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து நான் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பிய நிலையில், டி.வி.யில் நான் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக செய்தி வந்தது. அதனால், நான் உடனே புறப்பட்டு சென்னை சென்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து விளக்கம் அளித்தேன். நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு உங்கள் தொடர்பான புகார்களை அனுப்பிவிடுகிறோம். அவர்கள் அந்த வழக்கை விசாரிப்பார்கள். உங்கள் கணவரையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அனுப்பிவைத்தார்.
8 ஆயிரம் பவுன் நகை அடகு
இப்போது எனது பொறுப்பில் 8,000 பவுன் நகைகள் வங்கியில் மீட்க முடியாத நிலையில் உள்ளன. மற்றவை எனது முகவர்களிடம்தான் உள்ளது. எனக்கு முகவர்கள் தர வேண்டிய தொகை ரூ.8 கோடி வரை உள்ளது. நகை மற்றும் ரூ.8 கோடி பாக்கியை அவர்கள் தந்தால்தான் பணத்தை திரும்பத் தர முடியும். நான் யாரிடமும் நகையை வாங்கும்போது கையெழுத்திடவில்லை. ஆனால் முகவர்கள் என்னிடம் வாங்கிய தொகைக்கு ஆதாரம் இருக்கிறது. என்னுடைய பிரச்சினையைப் பயன்படுத்தி, முகவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸார் எனப் பலரும் என்னிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்” என்றார்.
இதன் பின்விளைவுகள் தெரிந்துதான் இதில் ஈடுபட்டீர்களா, வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளுக்கு யார் பொறுப்பு என்றபோது, “இதை விளையாட்டாகத்தான் செய்யத் தொடங்கினேன். இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று நினைக்கவில்லை. எனது கணவர் வெளிநாட்டில் இருந்ததாலும், நான் ஒரே பிள்ளை என்பதாலும் எனக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறேன்” என்கிறார் பாத்திமா.
கதவுகளை இயக்கிக் கொண்டிருந்த நவீன ரிமோட் கருவிகள், வீட்டினுள் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., ஆடம்பரப் பொருள்கள், வெளிப்புற கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் வயதான தாய், தந்தை, கடத்தல் பயத்தால் 10-ம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக வீட்டினுள் அடைபட்டுள்ள மகன் மகளுடன், சில இளைஞர்களின் பாதுகாப்புடன் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தளத்தில் குஷன் சோபா செட், மென்மயிர் கம்பளம் விரிக்கப்பட்ட முற்றத்தில் அமர்ந்தவாறு அச்சத்துடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா நாச்சியார்.
நன்றி:தி இந்து

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval