Tuesday, November 12, 2013

ரத்த அழுத்தத்தில் இருந்து காக்கும் கேரட், பப்பாளி!



ரத்த அழுத்தத்தில் இருந்து காக்கும் கேரட், பப்பாளி!
உலக மக்களை அச்சுறுத்தும் பிரச்சினையாக தற்போது உயர் ரத்த அழுத்தம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பசலைக்கீரை, பரங்கிக்காய், கேரட் போன்ற காய்கறிகள் மூலமும், வாழை, பப்பாளி போன்ற பழங்கள் மூலமும் மக்கள் தங்களை ரத்த அழுத்தத்தில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ). 

இந்நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி, உலகெங்கும் ஆண்டுதோறும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க, வயது வந்தோர் தினமும் 5 கிராமுக்குக் குறைவாக உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தினசரி 3 கிராம் பொட்டாசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். 

இந்தப் பரிந்துரை, இந்தியர்களாகிய நமக்கு ரொம்பவே முக்கியமானது. காரணம் நாம் தினமும் உணவில் 9 கிராம் உப்பு எடுத்துக்கொள்கிறோம். அதிகமான சோடியம் அளவும், குறைவான பொட்டாசியம் அளவும் ரத்த அழுத்த அபாயத்தை ஏற்படுத்தும், அதன் மூலம் இதயநோய், பக்கவாதம் போன்ற 'பகீர்' பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது, டபிள்யூ.எச்.ஓ. இன்றைய நிலையில், 13.9 கோடி இந்தியர்கள் அதிக ரத்த அழுத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இது உலகளவில் 14 சதவீதம். 1980-க்கும் 2008-க்கும் இடையிலான காலகட்டத்தில், உயர் ரத்த அழுத்தத்தால் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை 8.7 கோடி அளவுக்கு எகிறியுள்ளது. பால், கிரீம், முட்டை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் சோடியம் இயற்கையாக உள்ளது. 

அதிலும் உடனடி உணவுகள், நொறுக்குத் தீனிகளில் இது அதிகமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமாகும் போது இந்த சோடியமே ஆபத்தாகிறது. அதேவேளையில், பொட்டாசியம் நிறைந்த உணவுகள், ரத்த அழுத்தத்துக்குத் தடை போடுகின்றன. 

பொட்டாசியம் செறிந்த உணவுகள் என்று பார்த்தால், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பருப்பு வகைகள், பசலைக்கீரை, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும், வாழைப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழ வகைகளுடன், பேரீச்சம்பழத்தையும் கூறலாம். 

'தற்போது, பெரும்பாலானவர்கள் அதிக சோடியத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் போதுமான அளவு பொட்டாசியத்தை எடுத்துக்கொள்வதில்லை' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா. முடிந்தவரை உப்பு 'ஐட்டங்களை' ஒதுக்கி, காய்கறிகளைக் கூட்டிக்கொண்டால் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம்! 
Thanks to Malaimalar

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval