Wednesday, February 26, 2014

செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் ஏற்படாது: மத்திய அரசு கமிட்டி உறுதி

புதுடெல்லி, பிப்.27-

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என்று பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் ஏற்படாது: மத்திய அரசு கமிட்டி உறுதி

இந்நிலையில், மும்பை ஐ.ஐ.டி.யில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வரும் கிரிஷ்குமார் என்பவர், அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், செல்போன் கோபுர கதிர்வீச்சால், புற்றுநோய், மூளையில் கட்டி போன்ற ஆபத்துகள் ஏற்படும் என்று அவர் கூறி இருந்தார். 

அதை விசாரித்த ஐகோர்ட்டு, கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை ஆராயவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சிபாரிசு செய்யவும் ஒரு கமிட்டி அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

அதன்படி, மத்திய தொலைத் தொடர்பு துறை, 13 பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்தது. அதில், பேராசிரியர்கள், 'எய்ம்ஸ்' மருத்துவர், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், மனுதாரர் கிரிஷ்குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த கமிட்டி தனது கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களின் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. இதுதொடர்பான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. உலக சுகாதார நிறுவனம் அமைத்த குழுவும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. 

செல்போன்கள், குறைந்த அளவிலான ரேடியோ அதிர்வு சக்தியை வெளியிடுகின்றன. ஆனால், செல்போன் கோபுரம் வெளியிடும் ரேடியோ அதிர்வு சக்தி, அதை விட குறைவானது. ஏனென்றால், கதிர்வீச்சை வெளியிடும் ஆன்டெனாக்கள், செல்போன் கோபுர உச்சியிலோ அல்லது கட்டிட உச்சியிலோ பொருத்தப்படுவதால், பொதுமக்களிடம் இருந்து தூரத்திலேயே உள்ளன. 

எனவே, இந்த பொய் பிரசாரம் ஏற்படுத்திய அச்சத்தை போக்க பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks; MALAIMALAR

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval