Tuesday, October 15, 2013

நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ந் தேதி அமல்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

புதுடெல்லி, அக்.16-

நியாயமான இழப்பீடு கிடைக்க வழி செய்யும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதே போன்று அந்த சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன.

எனவே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 27-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார்.

119 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு மாற்றாக, புதிதாக இப்போது இயற்றியுள்ள சட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தலாம் என மத்திய அரசுக்கு சில மாநில அரசுகள் யோசனை கூறி உள்ளன.

அப்படி அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் புதிய சட்டத்தை அமல்படுத்துகிறபோது இந்த சட்ட அமலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கால அவகாசம் கிடைக்கும் என அவை தெரிவித்தன.

இருப்பினும் இந்த புதிய சட்டம் மக்களுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் புத்தாண்டு பரிசாக ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுபற்றி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நிச்சயமற்ற தன்மையை குறைக்கிற வகையில், அது குறித்த அறிவிக்கையை விரைவில் வெளியிடுவோம். இந்த சட்டத்தை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம்” என கூறினார்.

மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு எடுத்துள்ளதால், மாநில அளவிலான நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மறு குடியமர்த்தல் ஆணையம் உள்ளிட்ட 6 உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளை இந்த ஆணையம் கையாளும்.

இந்த சட்டத்தின் வரைவு விதிகளை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் புதிய சட்ட அமலாக்கலுக்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய சட்டம் அமலுக்கு வந்தபின்னர், ஒரு நிலம் அரசாலோ, அரசு அமைப்புகளாலோ கையகப்படுத்தப்படுகிறபோது, அதற்கு நில உரிமையாளர்கள் நியாயமான, நேர்மையான இழப்பீட்டு தொகை பெற வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி;மாலைமலர் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval