Friday, October 20, 2017

படித்ததி ல் பிடித்தது, ஒரு கிராமத்தை வியக்க வைத்த இறப்பு!

Two feet of a dead body, with an identification tag - blank sign attached to a toe. Covered with a white sheet.தமிழகத்தின் தென் பகுதியில் அந்தக் கிராமம் இருக்கின்றது. கிராமத்தில் மிகப் பெரும்பாலான மக்கள் ஏழை எளியவர்கள். பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டவர்கள். ஆனாலும் தங்கள் உழைப்பையே நம்பி அதன் மூலம் வாழ்க்கையை நகர்த்தும் கண்ணியமான மக்கள்.
ஒரு காலகட்டத்தில் பொருளாதாரம் இருந்தும் சொந்த உழைப்பில் வாழ்ந்தும் சமுதாயத்தில் சமத்துவம் கிடைக்காத காரணத்தால் அவர்களில் சில குடும்பங்கள் இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக வாழ ஆரம்பித்தார்கள்.
சில மாதங்கள் சென்றன. புதிதாக இஸ்லாமைத் தழுவிய ஒரு குடும்பத்தில் ஒரு மூதாட்டி மரணித்துவிட்டார். சமீபத்தில்தான் அவர்கள் இஸ்லாமைத் தழுவி இருந்ததால், மரணித்தவரை என்ன செய்யவேண்டும், இஸ்லாமிய முறைப்படி எப்படி அடக்கம் செய்யவேண்டும்... என்று தெளிவாக அவர்களுககு தெரியாதிருந்தது. திகைத்துப் போய் நின்றிருந்தனர். அவர்களுக்கு பழக்கமான வெளியூரில் வாழும் முஸ்லிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கான ஆயத்தங்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். அதே சமயம் இஸ்லாமை ஏற்காத அந்த ஊர் மக்கள் மரணித்த அந்த வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
“இவர்கள் ஏதோ புதிய மார்க்கத்தில் சேர்ந்தார்கள், ஆனால், மரணம் அடைந்ததும் செயலற்று நிற்கிறார்களே” என்று எண்ணி பலவாறாக பேசிக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.
திடீரென்று அந்தக் கிராமத்தில் ஒரு வேன் நுழைந்தது. புழுதி பறக்க வந்த அந்த வேன் ஊர் மையத்தில் நின்றது. கிராமத்தில் அந்நிய வாகனம் ஒன்று வந்துவிட்டால் அனைவருமே புருவம் உயர்த்திப் பார்ப்பது இயல்புதானே. அதைப்போலவே, அந்த வாகனத்தைப் பார்த்தனர். வேனிலிருந்து இறங்கியவர், “இங்கு ஒரு முஸ்லிம் இறந்துவிட்டாராமே, அந்த வீடு எங்கே இருக்கிறது?” என்று விசாரிக்க, உடனடியாக அவர்களுக்கு வீட்டிற்கு வழி காட்டப்பட்டது.
அந்தக் காரிலிருந்து வசதியான குடும்பத்தைச்சேர்ந்த பர்தா அணிந்த சில பெண்கள் இறங்கி இறப்பு நிகழ்ந்த வீட்டிற்குள் ஸலாம் கூறியவாறு நுழைந்தார்கள். உள்ளே இருந்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் அவர்களைப் பார்த்தார்கள். மரணித்தவரை உரிய முறையில் குளிப்பாட்டி, அடக்கம்செய்ய உதவுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம் என்று அறிவித்தார்கள். செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. அனைவரும் வாயடைத்துப் போனார்கள். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் கொப்பளிக்க பெண்கள் அந்தச் சிறு வீட்டினுள் நிறைய ஆரம்பித்தார்கள். வந்த பெண்மணிகள் பொறுமையாக அனைவரையும் விலக்கி தங்களது காரியங்களை மளமளவென்று செய்யத் தொடங்கினார்கள். குளிப்பாட்டி கஃபனிட்டார்கள். இறுதியாகப் பார்க்க வேண்டியவர்களை அழைத்துப் பார்க்கச் செய்தார்கள். அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்து முடித்தார்கள்.
அதற்குள் பக்கத்து கிராமத்திலிருந்தும் முஸ்லிம்கள் வந்து இறங்க ஆரம்பித்தனர். ஜனாஸாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கிராமத்து மக்கள் வாயடைத்துப் போனார்கள். நாமோ அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். நமது அந்தஸ்தோ மிகக் கீழானது. நம்மை தொட்டாலே தீட்டு. நமது உடல் பட்டாலே பாவம் என்று கேவலமாக நினைக்கும் சமுதாயங்களுக்கு இடையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரைத் தொட்டுக் கழுவி சுத்தம் செய்து, குளிப்பாட்டி... நினைத்த மாத்திரத்தில், அவர்கள் கண்களில் நீர் ததும்ப ஆரம்பித்தது. நாம் எதிர்பார்த்து வந்து சமத்துவத்தைவிட பன்மடங்கு மேன்மையான மனிதாபிமானம் இங்கே இருக்கிறதே என்று அவர்கள் திகைத்து நின்றார்கள்.
அந்த வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான கண்கள் ஆவல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்ட ஓரே காரணத்திற்காக இத்தகைய மனித நேயத்தையும் சமத்துவத்தையும் பெற முடியுமென்றால் இன்னும் எத்தனை சிறப்புகளும் மேன்மைகளும் இந்த மார்க்கத்தில் இருக்குமென்று எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார்கள் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள்.
அன்றிலிருந்து பல நாட்களுக்கு அந்த ஊர் முழுவதும் இந்த ஒரு சம்பவமே திரும்பத்திரும்ப பேசப்பட்டது. செய்தி அக்கம்பக்கத்து கிராமங்களுக்குப் பரவ ஆரம்பித்தது.
படிப்பினை:
மனித நேயம் பற்றியும் சமத்துவம் பற்றியும் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆயிரகணக்கில் சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன. இன்றும் முஸ்லிம்கள் பேச்சாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அங்கீகாரத்தை மனிதநேயமுள்ள செயல் வீரர்களுக்கு கொடுக்காதது வியப்பளிக்கின்றது. ஆனால், இந்த ஒரு சம்பவம் எத்தனை பேரிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை நிகழ்த்தி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பாக்க வேண்டும். இன்னும் இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் உலகெங்கும் மனிதாபிமானமுள்ள செயல்களால் அது ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடியும்.
இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் ஒரு முன்மாதிரி பல்கலைக்கழகத்தில் தஃவா என்னும் தலைப்பில் படித்துப் பட்டம் பெறுவதைவிட அதிகமான படிப்பினையைக் கொடுக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு செயலை உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்யும் போதும், அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காணும் விதத்தில் நமது நடத்தை அமையும் போதும், இறைவன் அந்தச் செயலுக்குரிய நன்மையைப் பன்மடங்காக்கி இதயங்களை இளகச்செய்துவிடுவான் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
உங்கள் சிந்தனைக்கு : ”பலவீனர்களில் என்னைத் தேடுங்கள், ஏனேனில், உங்களில் பலவீனர்களின் காரணத்தால்தான் உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன. உங்களுக்கு உதவி செய்யப்படுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval