எங்கள் திருவாரூர் மாவட்ட வேலுக்குடிதான் அந்தக் கவிப்பறவையின் தாய்மடி. 1914 செப்டம்பர் 11-ல் இந்த பூமியில் தரையிறங்கிய அந்தக் கவிதை ராஜாளி, தனது வசீகரச் சிறகுகளால் இலக்கிய வானத்தையும் ஞான வானத்தையும் ஒன்றாய் அளந்தது.
இலக்கிய தபோவனத்திற்குள் இருந்தபடியே ஞானத்தை அடைந்தவர் ஷெரிப். அவரது உயரம், சகல உயரங்களையும்விட உயரமானது.
கா.மு. ஷெரிப், அன்றைக்கு இருந்த பிரபல பட நிறுவனமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் செல்வாக்கோடு திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் திருவாரூரில் இருந்த இளைஞர் கலைஞரை, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அழைத்துச்சென்றதே கவிஞர் ஷெரிப்தான்.
ஷெரிப், திரையில் தீட்டிய காவியப் பாடல்கள் திரையுலகின் திருப்புமுனைப் பாடல்களாகும்.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ இந்தத் திரைப்பாடல், இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும்! இவர் புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையாரும் சிறந்த நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் ஆசையும் அன்புமாய் அரவணைத்தார்.
அன்புமழை பொழிந்து தன் வாழ்நாள் நெடுக என்னை இதயமாற நனைத்தார்.
நான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறினைப் பெற்றேன்.
அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என்மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.
புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம்தான் என்பதற்கான கண்கண்ட சத்திய சாட்சியங்கள்தான் கவி கா.மு. ஷெரிப் போன்ற கருணாமூர்த்திகள்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனசாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகளை வைத்து கோடிக்கு அதிபதியாய் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசிவரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே. ஒரு வீடு கேளுங்களேன்!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!’ என்றார் அவர்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா.
விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள்கூடி முடிவு செய்தனர்.
விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரிப். விழா நெருங்குகிற நாள்வரை பாதி அளவுக்குமேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரிப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்நகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.
“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன்மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது.
அந்த முன்மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு உன்னத இலக்கணம்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான இதயம் கொண்டவர் ஷெரிப்.
இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், தங்கள் தனித்தன்மையைப் பேணுவதோடு இங்கே வாழும் தமிழ் மக்களோடு இதயம் ஒன்றி வாழவேண்டும் என்று சமத்துவத்தை போதித்தவர் அவர்.
புலால் சாப்பிடுவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றபோதும், கடைசிவரை சைவச் சாப்பாட்டையே உண்டுவந்தார். வள்ளலாரின் காருண்யநெறி அவரை ஆரத்தழுவியிருந்தது.
அவர் காங்கிரஸில் இருந்த நாட்களில் வெளியூர் கூட்டங்களுக்குச் செல்ல நேரும்போதெல்லாம், அங்கே ஆடம்பரமான விடுதி அறைகளில் தங்கமாட்டார். கட்சிப் பிரமுகர்களின் இல்லங்களிலேயே தங்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிவரை எளிமையின் புத்திரராகவே திகழ்ந்தார்.
சீறாப்புராண சொற்பொழிவாற்றத் தொடங்கிய பிறகு, பிரமுகர்களின் இல்லங்களையும் தவிர்த்து, பள்ளிவாசல்களில் தங்குவதையே வழக்கமாக ஆக்கிக்கொண்டார். காரணம் அணுவளவும் மனதில் இறை எண்ணத்தைத் தவிர, பிற எண்ணங்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டு சுதந்தரமாக வாழ்ந்த ஞானவிருட்சம் அவர்.
சீறாப்புராண சொற்பொழிவிற்காக அவர் மீண்டும் மீண்டும் அந்தப் புனித நூலையே படித்துக்கொண்டிருப்பார். கண்ணாடி அணிந்தபோதும், அவரது கண் பார்வை, படிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே ஒரு பூதக்கண்ணாடியை வலது பக்கக் கண்ணாடிக்குக் கீழே வைத்துக்கொண்டு ஆழ்ந்து படிப்பார். இது அவரது ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் உன்னத உதாரணம்.
சைவத்தமிழ் அறிஞர்களைவிடவும் புராண, இதிகாச, காவியங்களில் முழுக்கத் தோய்ந்திருந்தவர் கவி. கா.மு. ஷெரிப். ஒருமுறை சைவத்தமிழ் அறிஞரான அ.ச. ஞானசம்மந்தனார், கவிஞர் ஷெரிப்பைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ஷெரிப்பின் இரண்டு கைகளையும் ஆசையாகப் பற்றித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டார். இதை வியப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அ.ச.ஞா, “தம்பி, நாங்கள் பெற்ற அறிவு, படித்துப் பெற்ற அறிவு. ஆனால் இவருடைய ஞானம், இறைவன் கொடுத்த கொடை. இவர் பூவாது காய்க்கும் மரம்’ என்று நெகிழ்ந்து சொன்னதை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தோடு முரண்பாடு ஏற்பட்டபோது, கா.மு. ஷெரிப், பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் சேர முடிவெடுத்தார். காமராஜரோ, கவிஞர் ஷெரிப்பின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். எனவே ஷெரிப், கட்சியில் இணையும் விழாவை தடபுடலாக நடத்தத் தீர்மானித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் இடம்தராமல், திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜரின் இல்லத்திற்கே கிளம்பிவிட்டார் ஷெரிப். இந்தத் தகவல் அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அவர் வரும் வரை வாசலில் நின்று காத்திருந்து, இரு கைகளையும் நீட்டி “உங்களை எப்படி எப்படியோ வரவேற்கணும்னு நினைச்சேன்’ என்று ஆரத்தழுவிக்கொண்டார்.
கவி கா.மு. ஷெரிப்போ “நீங்கள் வாசல்வரை வந்து வரவேற்றது, தமிழ்நாடே வரவேற்றது போல’ என காமராஜரின் ஆதங்கத்தை போக்கினார். காமராஜரோ அவர் கையைப் பிணைத்து உள்ளே அழைத்துச்சென்றார்.
அப்போது கவி. கா.மு. ஷெரிப் “பிணைந்த இந்தக் கைகள், பிணைந்ததுதான். இனி எப்போதும் பிரியாது. எனக்கு அரசியலில் இனி எந்தத் தலைவரும் இல்லை’ என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தி பெருந்தலைவரையும் பூரிப்பில் ஆழ்த்தினார்.
ஒருமுறை எல்லீஸ் சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கவி கா.மு. ஷெரிப் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது ஒரு இஸ்லாமிய வர்த்தகப் பிரமுகரும் அவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் தோல் தொழிற்சாலை வைத்திருந்தார் என்பதாக நினைவு.
வந்தவர் ஒரு கவரில் ரூபாய் நோட்டுக்களைப் போட்டு கவிஞரிடம் கொடுத்தார். கவிஞரோ, அதை அப்படியே அவரது பையிலேயே திருப்பிச் செருகி, “வந்தீங்க. பார்த்தீங்க. போய்ட்டு வாங்க. இதைக் கொடுத்து என்னை மேலும் சீக்காளி ஆக்கிடாதீங்க’ என்று அவருக்கு விடைகொடுத்துவிட்டார். அந்த சமயத்தில் கவிஞரிடம் பத்து ரூபாய்கூட இருக்கவில்லை.
அவர் போனதும் கவிஞரிடம், “அய்யா, அவர் அன்போடு கொடுத்த பணத்தை வாங்கியிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பாரே’ என்றேன். கவிஞரோ “இவர் கொடுப்பது ஹராமான(பாவமான) பணம். இதை நான் வாங்கினால் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்றார். வறுமையிலும் அவரிடமிருந்த செம்மையைப் பார்த்து சிலிர்த்துப்போனேன்.
சென்னை வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான், சிங்கப்பூர் வானொலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிங்கப்பூர் புறப்படுவதற்குமுன், என் ஞானகுருவான கவி கா.மு. ஷெரிப் அவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றேன். அன்போடு விசாரித்தார். பெரியவர்களிடம் ஆசிபெறும் முறைகளின்படி, அவரது இரண்டு திருவடிகளையும் தொட்டு வணங்கினேன்.
பதறிப்போன கவிஞர், “இஸ்லாத்தில் அடுத்தவர் கால்களைத் தொட அனுமதி இல்லை. உனக்குத் தெரியும்தானே’ என்றார். பின் அன்போடு என் உச்சந்தலையில் கைகளை வைத்து, ஏறத்தாழ ஏழு நிமிடங்களுக்கு குர்ரானின் வசனங்களை ஓதி வாழ்த்தினார். அது நான் பெற்ற பேறு.
பின்னர், “எப்போது திரும்பி வருவாய்? ஆறு மாதம் ஆகுமா? ஒரு வருடம் ஆகுமா?’ என்று அன்பொழுகக் கேட்டார். அதில் மீண்டும் பார்க்க முடியுமா என்கிற பரிதவிப்பு இருப்பதை என்னால் உணரமுடிந்தது. “வாய்ப்பு அமைகிறபடி வருவேன் அய்யா. நான் வரும்போது நீங்கள் நல்லபடியா இருப்பீங்கய்யா’ என்றேன்.
ஒரு கணம் நிதானித்த கவிஞர் “அதை இறைவன் தீர்மானிக்கணும். பொழச்சிக்கிடந்தா பார்போம்’ என்றார். பின்னர் சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு என்னை அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, “வர்றேங்கய்யா’ என வணங்கிவிட்டு விடைபெற்றேன். அது கடைசி விடைபெறுதல் ஆகிவிட்டது.
சிங்கப்பூர் வானொலியில் “இரவுப் பூங்கா’ என்ற தலைப்பில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அங்கு ஏகப் பிரபலம். ஒருநாள் அந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, கவி கா.மு. ஷெரிப் மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதில் தோட்டாக்களைப் பாய்ச்சியது. இருந்தும் கவி கா.மு. ஷெரிப் அவர்களின் பாடல்களையும் அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் கலந்து கொடுத்து அவருக்கு அஞ்சலி செய்தேன்.
அவரது “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா…’ என்ற பாடலை ஒலிபரப்பியபோது, பல வாசகர்கள் தொலைபேசியில் வந்து கதறியழுதார்கள். கடல் கடந்த தமிழர்களையும் கலங்கிக் கதறவைத்த மரணம், அவரது மரணம்.
கவி கா.மு. ஷெரிப்பிற்கு இரங்கல் கூட்டத்தை சிங்கப்பூரில் இருக்கும் பென்கூலன் ஸ்ட்ரீட் பள்ளிவாசலில், தமிழ் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதிலே என்னை உரையாற்ற வைத்தனர். என்மீது அளவுகடந்த அன்புகாட்டி வந்த கவி. கா.மு. ஷெரிப்பிற்கு, நான் கண்ணீர் வார்த்தைகளால் அஞ்சலி செய்தேன்.
கவி கா.மு. ஷெரிப் எனக்கு ஞானகுருவாக வாய்த்தவர். திருக்குர்ரானுக்குள் என்னை பரவசத்தோடு பிரவேசிக்க வைத்தவர். அதில் இருக்கும் இறை வசனங்களை எனக்குப் போதித்து சுதி சுத்தமாக என் மனதில் அவற்றைப் பதியவைத்தவர். என் மனதை நன்னெறிப்படுத்தியவர். இன்றும் என்னுள் இருந்து வழிகாட்டுகிறவர் அவர்தான். இனி அவர்போல ஒரு அறிஞரை, கவிஞரை, ஞானியை எங்கே நான் பார்ப்பேன்?
-வீரபாண்டியன்
தகவல்;சவ்க்கத் அலி
BOSTON U.S.A. குறிப்பு/ எனது முன்னோர்கள் அண்ணாவியார்
புலவர்கள் இயற்றிய அரிய பொக்கிஷங்களை
ஏற்றுச்சுவடிகளிலிருந்து புத்தகவடிவில் கொண்டுவர எனது பாட்டனார் மர்ஹூம் ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களோடு சேர்ந்து முயற்ச்சி செய்து அணிந்துரையும் வழங்கினார்கள் கவி கா.மு. ஷெரிப் எண்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
அப்துல் வாஹித் அண்ணாவியார்
புலவர்கள் இயற்றிய அரிய பொக்கிஷங்களை
ஏற்றுச்சுவடிகளிலிருந்து புத்தகவடிவில் கொண்டுவர எனது பாட்டனார் மர்ஹூம் ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களோடு சேர்ந்து முயற்ச்சி செய்து அணிந்துரையும் வழங்கினார்கள் கவி கா.மு. ஷெரிப் எண்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
அப்துல் வாஹித் அண்ணாவியார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval