Friday, January 3, 2014

அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு


ஸூரத்துல் பகரா தொடர்ச்சி 

21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். நீங்கள் பயபக்தியுடையவர்கள் ஆகலாம்.

22. அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச் செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனிவர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; நீங்கள் அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இனைகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.

23. இன்னும், நம் அடியாருக்கு நாம் அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களேயானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

24. நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். நிராகரிப்பவர்களுக்காகவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது.

25. நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப் படும்போதெல்லாம் “ இதுவே முன்னரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் இது போன்றதுதான் கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும், அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.

26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் மேற்ப்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள்; ஆனால் நிராகரிப்பவர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப்படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

27. இவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.

28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள்.

29. அவன் எத்தகையவன் என்றால்: அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.

30. இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “ நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன் ” என்று கூறியபோது, அவர்கள் “ நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் ” என்று கூறினார்கள்; அவன் “ நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன் ” எனக் கூறினான்.
courtesy.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval