Thursday, October 30, 2014

இந்திய தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை: இலங்கை நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு !!

Untitled-1 copyபோதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பத்மா சூரசேன இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பொய் வழக்கு
இதனிடையே தமிழக மீனவர்கள் மீது தொடரப்பட்ட போதை பொருள் கடத்தல் வழக்கு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என மீனவர்கள் சங்கத் தலைவர் பாரதி தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்ளாத மத்திய அரசு
மேலும் இந்த விவகாரத்தை மத்திய அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இனிமேலாவது மத்திய அரசு தலையிட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி வலியுறுத்தி உள்ளார்.
மேல்முறையீடுக்கு அனுமதி
இதனிடையே, தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 14ஆம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர், மீனவர்கள் அதிர்ச்சி
மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையால், தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval