கால் நூற்றாண்டுக்கு முன்னாடி, நம்ம தெருவுல நாம நம் சக தோழர்களுடன் விளையாடிட்டு இருப்போம். திடீர்ன்னு ஒரு தோழனுக்கு மட்டும் ஜுரம் அடிக்கும். கஷாயம் வச்சி குடுப்பாங்க. அதுக்கு அடங்காது, மறுநாள் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க. மாத்திரை போடுவாங்க... அடங்காது, அடுத்த நாள் ஊசி போடுவாங்க... அதுக்கும் அடங்காம, இன்னும் சில பின் விளைவுகள் வரும்.....
...அப்பறம் ஒரு வாரத்துல பார்த்தா, ஜூரம் எல்லாம் குறைந்து பையன் நார்மலுக்கு வரும்போது, கால்கள் சூம்பிப் போய், துவண்டு நடக்க முடியாமல் மாறியிருக்கும்.
இது தான் போலியோ....!!!
தெருவுக்கு ஒன்னு ரெண்டு பசங்க இப்படி பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுக்க நடக்க முடியாம, சக்கர வண்டியில் போகும் நிலை ஏற்படும்.
இது நம்ம தெருவுல, நம்ம ஊருல, நம்ம நாட்டுல மட்டும் இல்ல... உலகம் முழுக்கவும் இந்தப் பிரச்சினை தலைவிரித்து ஆடியது. மருந்து கண்டு பிடிச்சாச்சி... நோயை குணமாக்க அல்ல, அது வராமல் தடுக்க!! பிறந்ததில் இருந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையாக இருக்கும் காலத்தில் வருடத்திற்கு இரண்டு முறை இந்த சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்தால், அந்த நோய் இவர்களை அண்டாது.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் உடனடியாக இந்த சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாதுகாக்க முற்பட்டாலும், இது ஒரு தொற்று நோய் என்பதால், உலகம் முழுவதும், இந்த நோயை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினால் மட்டுமே தங்கள் நாட்டு குழந்தைகளை முற்றிலுமாக இந்நோயின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலை!!
தங்கள் நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து சொட்டு மருந்து கொடுக்க மேலை நாடுகளால் முடியும். ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஆப்பிரிக்க மற்றும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலும் இந்த நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமே!!
என்ன செய்யலாம்???
உலக நாடுகள் மிகுந்த கவலையோடு யோசித்த போது தான் ரோட்டரி இயக்கம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது! உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வருடத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் (ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23) ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சொட்டு மருந்தை போடும் பணியை உலகம் முழுவதிலும் இருந்த ரோட்டரி சங்கங்கள் தங்களது தலையாய பணியாக ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தன.
அதாவது வருடத்திற்கு இரண்டு தவணையாக அதை போட வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு தவணைக்கு போடப்படும் சொட்டு மருந்தின் விலை 25 ரூபாய். ஆக ஒரு குழந்தைக்கு வருடம் 50 ரூபாய். இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் 100 கோடி குழந்தைகள் பிறந்திருந்தால், அவனை அனைத்திற்கும் ஐந்து முறை இது போன்று போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எத்தனை ஆயிரம் கோடிகள், மன்னிக்கவும் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் இந்த நோயை உலகில் இருந்து ஒழித்துக்கட்ட செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை நீங்களே இலகுவாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள்..!!
இந்த நிதி முழுவதுமே கிட்டத்தட்ட ரோட்டரியால் மட்டுமே திரட்டப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு தான் இந்தியா போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்னமும் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.
அந்த நாடுகளிலும் அழிக்கப்படும் வரையிலும் கூட நாம் நம் குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும். தெருவில் அனைத்து வீடுகளும் பற்றி எரிகிறது. நம் வீடு மற்றும் இன்னும் பல வீடுகள் எரிவது அணைக்கப்பட்டுவிட்டது..., அண்டை வீட்டில் நெருப்பு இன்னும் பற்றி எரிகிறது என்றால், அதுவும் அணைக்கப்படும் வரை நம் வீட்டில் நாம் தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? அது போலத்தான்!!!
சமீபகாலமாக பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையில் இருந்து பெரும் நிதியை இந்த சேவைக்காக மட்டும் ரோட்டரிக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். உலகெங்கிலும் உள்ள ரொடேரியன்கள் இதற்கான நிதியை தாங்களும் தந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும் திரட்டுகின்றனர். கடந்த ஒரு சில ஆண்டுகளாக அரசாங்கம் கூட இதில் இணைந்திருக்கின்றது. அதன் பொறுப்பில் எடுத்தும் நடத்துகிறது. ஆனால் பெரிய நிதிப் பங்களிப்பு எதுவும் இல்லாமல்!!
இந்த நிலையில் இதற்கான நிதியை திரட்டுவதற்காக இன்று இந்தியாவில் ஒரு முக்கிய நபர் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்...
அவர் யார்? என்ன செய்யப்போகின்றார்? என்பதை அடுத்த பதிவில் எழுதுகின்றேன். அவசியம் படியுங்கள்!!
.....தொடரும்!
PATTUKKOTTAI
Ravi SR Ravi
Ravi SR Ravi
Ravi SR Ravi
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval