Sunday, October 19, 2014

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Image result for no images5032. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ”சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் ”சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், ”(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ”நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி ”நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

5037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), ”திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ”யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval