Friday, October 10, 2014

நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி


நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி      2014–ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு கிடைத்துள்ளது. அவர் இந்த விருதை பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுடன் சேர்ந்து பெறுகிறார்.

தெற்கு டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் அவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் நேற்று படையெடுத்தனர். அப்போது கைலாஷ் மும்முரமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

செய்தியாளர்களைக் கண்டதும், அவருடைய மனைவி சுமேதா நிருபர்களிடம் மகிழ்ச்சி பொங்க கூறுகையில், ‘‘ஏழை, எளியவர்களுக்கான இடைவிடாமல் பாடுபட்டு வரும் எனது கணவரைப் போன்ற எளிமையான ஒரு மனிதருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’’ என்றார்.

தொடர்ந்து கைலாஷ் சத்யார்த்தி கூறியதாவது:–

இந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

நான் மகாத்மா காந்தி இறந்ததற்கு பிறகு பிறந்தவர். இந்த பரிசு எனக்கு முன்னதாக மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் அதை விட இன்னும் நான் பெருமை அடைந்து இருப்பேன். இது நிஜமாகவே எனக்கு கிடைத்த கவுரவம் தான். இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

குழந்தை தொழிலாளர் முறை என்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் வறுமையும் மட்டுமே அல்ல. அதற்கும் மேலானது. எனவே இந்த போராட்டம் தொடரும். இந்த பிரச்சினை உலக அளவில் இன்று அங்கீகரிக்கப்பட்டு இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

குழந்தைகளின் உரிமைகளுக்காக நாங்கள் எளிய முறையில் போராடி வருகிறோம். இந்த விருது குழந்தைகள் நலனுக்காக நான் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி இருக்கிறது. இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமின்றி இன்னும் ஏராளமான நாடுகளில் உள்ளது.

குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடுவது மிகப்பெரிய சவாலாகும். காந்திய வழியில் அமைதியான முறையில் எங்களது போராட்டங்களை பல்வேறு வடிவில் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைலாஷ் சத்யார்த்தி 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 11–ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் விதிஷா நகரில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வந்த இவர் குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக பதவியை துறந்தார்.

1980–ம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது பற்றி அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.

அதன் பின்னர் 1983–ம் ஆண்டு குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் (பச்பன் பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.

இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இதுபோல் மீட்டு அவர்களை கல்வி கற்க வைத்த பெருமையும் கைலாஷ் சத்யார்த்திக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக நடத்தி வருகிறார்.

சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அமைதியான முறையில் நிகழ்த்தி உள்ளார். பணத் தேவைக்காக அவர்களின் குழந்தை பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

குழந்தைகளுக்கு கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் தீவிரமாக போராடி வருகிறது.

இவருடைய சேவைக்காக 2007–ல் இத்தாலிய பாராளுமன்ற விருது, 2009–ல் அமெரிக்காவின், தற்காப்போருக்கான ஜனநாயக விருது, ராபர்ட் எப்.கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது (அமெரிக்கா), பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது (ஜெர்மனி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகள் கிடைத்துள்ளன.

நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997–ம் ஆண்டு ஜூலை 12–ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்– தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு.

மலாலா தனது 11–வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த தலீபான் தீவிரவாதிகள் 2012–ம் ஆண்டு அக்டோபர் 9–ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.

17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி வசித்த விஞ்ஞானி லாரன்ஸ பிராக் தனது 25–வது வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1915–ல் தனது தந்தையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
courtesy;Malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval